மதுரையில் நடுரோட்டில் இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த காரணத்தினாலே வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக மைத்துனர் உள்பட 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை முத்துப்பட்டி கண்மாய்கரை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 24) பட்டதாரியான இவர் கோவையில் வேலை பார்த்து வந்தார். அனிதாவை பெண் வீட்டாரின் எதிர்ப்பை மீறி கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனிதாவிற்கு அவரது உறவினர் ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது அவர் கர்ப்பிணியாக உள்ளார். இதற்கிடையில் சதீஷ்குமாருக்கும், காதல் மனைவி அனிதாவுக்கும் இடையே மீண்டும் தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் அடிக்கடி போன் மூலம் தொடர்ந்து பேசி வந்தனர். இதனை இரண்டாவது கணவர் செந்தில் மற்றும் அனிதாவின் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர்.
இதனையடுத்து சதீஷ்குமார் அனிதாவை தன்னுடன் மீண்டும் அழைத்து வந்து விட்டார். இதையறிந்த அவரது பெற்றோர் சதீஷ்குமாரின் வீட்டிற்கு சென்று, தனது மகளை தங்களுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சதீஷ்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து விசாரிக்க இரு வீட்டினரையும் போலீஸ் நிலையத்திற்கு வருமாறு போலீசார் அழைத்தனர். அதன்படி சதீஷ்குமாரும், அனிதாவின் உறவினர்களும் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.
பின்னர் சதீஷ்குமார் சாப்பிடுவதற்காக வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து அனிதாவின் சகோதரன் உள்ளிட்ட 4 பேர் சதீஷ்குமாரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த பின்னர் அனிதாவின் அண்ணன் அரவிந்தன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.