தேர்தல் தகராறில் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் படுகொலை- பொதுமக்கள் ஆவேசம் !!
அரக்கோணம் அடுத்த சித்தம்பாடி கவுதம நகர் பகுதியில் சோகனூரை சேர்ந்த அர்ஜுன் (20), சூர்யா (25) மற்றும் அவரது நண்பர்கள் நேற்றிரவு மது குடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது பெருமாள் ராஜப்பேட்டையை சேர்ந்த நண்பர் ஒருவரை மது குடிக்க அழைத்தனர். அவரிடம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இருதரப்பினருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாகவும் அதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அழைத்தனர்.
இதையடுத்து அவர் அங்கு சென்றார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ஒருவன், பீர் பாட்டிலால் பெருமாள் ராஜப்பேட்டையில் இருந்து வந்த வாலிபரின் தலையில் தாக்கினார்.
இதில் அவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் போன் செய்து அவரது நண்பர்களை அங்கு அழைத்தார். பதிலுக்கு எதிர்தரப்பை சேர்ந்தவர்களும் தங்கள் ஆதரவாளர்களை அழைத்தனர்.
இதனால் அங்கு கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் பாட்டில் மற்றும் கத்தி, கட்டைகளால் பயங்கரமாக தாக்கிக்கொண்டனர். இதில் சோகனூரை சேர்ந்த சூர்யா, அர்ஜூன் மேலும் மதன், சவுந்தரராஜன் ஆகிய 4 பேர் பலத்த காயமடைந்தனர்
.
அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சூர்யா, அர்ஜூன் ஆகிய 2 பேரும் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
காயமடைந்த 2 பேரும் திருத்தணி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொலையான சூர்யாவுக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது. அர்ஜூனுக்கு திருமணமாகி 10 நாட்கள்தான் ஆகிறது. புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
டி.எஸ்.பி. மனோகரன், அரக்கோணம் தாலுகா இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் ஆகியோர் சித்தம்பாடி கவுதமநகர் பகுதிக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.





