தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க 19 கட்டுப்பாடுகள் விதிப்பு..!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகளை வெடிக்க பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகளை வெடிக்க 19 கட்டுப்பாடுகளை விதித்து சென்னை காவல் ஆணையர் அருண் அறிவுரை வழங்கியுள்ளார்.
அதன்படி, காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். பட்டாசு வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது.
மேலும் தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ, வெடிப்பதோ கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.வாகனங்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடங்களில் வெடிக்கக்கூடாது என்றும், பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எறிந்து விளையாடக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எக்காரணத்தைக் கொண்டும் குடிசைகளின் பக்கத்திலோ, ஓலைக் கூரைகள் உள்ள இடங்கள் அருகிலோ வானவெடிகளையோ அல்லது பட்டாசு வகைகளையோ கொளுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் சென்னை காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
அதேபோல் கால்நடைகள் அருகில் பட்டாசு வெடிப்பதால் அவை மிரண்டு ஓடும்பொழுது பொதுமக்கள் மீதும் முட்டி விபத்துக்கள் நேரிடலாம் என்பதால் அதனை தவிர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது. தீ விபத்து அல்லது பட்டாசுகளினால் ஏதேனும் விபத்து நேர்ந்தால், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, அவசர மருத்துவ உதவி ஆகிய உதவி எண்களைத் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.





