17 வயது சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கி விட்டு ஏமாற்றியதால் சிறுமி விஷம் குடித்துவிட்டு தற்கொலை..!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி தன்னை கர்ப்பமடைய செய்த உறவினர் மீது நடவடிக்கை எடுக்காததால் 17 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் கவரப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் அவரது உறவினர் பழகி திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கர்ப்பமடைய வைத்துள்ளார். இது சம்பந்தமாக தன்னை ஏமாற்றிய அந்த உறவினரின் மீது மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த சிறுமி தனது தாயாருடன் வந்து புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் மீது கடந்த 6 மாதமாக வழக்கு பதியாமல் மகளிர் போலீசார் அலைக்கழித்துள்ளனர். இதனை கண்டித்து அந்த சிறுமி தனது தாயாருடன் நேற்று முன்தினம் மகளிர் ஸ்டேஷன் முன்பாக உட்கார்ந்து தர்ணாவில் ஈடுபட்டு உள்ளார். இந்த நிலையில் சிறுமியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இந்த வேதனை தாங்காமல் இன்று காலை அந்த சிறுமி விஷமருந்தியுள்ளார். உடனடியாக அரசு மருத்துவமனை கொண்டு வரும் வழியில் அவர் இறந்துள்ளார். இதனால் மணப்பாறை பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் ஜெயராமன், திருச்சி சரக டிஐஜி, ஆகியோர் முகாமிட்டு சிறுமியின் தாயாரிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







