--- --:--:-- --

சபாநாயகர் நோட்டீஸ்.. பதிலளிக்க ஒரு மாதம் அவகாசம்… ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் கோரிக்கை!!

11-MLA

சபாநாயகரின் நோட்டீசுக்கு பதிலளிக்க ஒரு மாதம் அவகாசம் வேண்டும் என ஓபிஎஸ் உள்ளிட்ட பதினோரு எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதல்வரான எடப்பாடி பழனிசாமி, 2017-ம் ஆண்டு பிப்ரவரியில் சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது தனி அணியாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர். பின்னர் ஓபிஎஸ் அணி அதிமுகவில் இணைந்தது.

 

இதனால் அதிமுக கொறடா உத்தரவை மீறி நம்பிக்கை தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக கொறடா சக்ரபாணி சபாநாயகரிடம் மனு கொடுத்தார். ஆனால் சபாநாயகர் இந்த மனுவை கிடப்பில் போட்டதால் திமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது . ஆனால் உயர்நீதிமன்றமோ, சபாநாயகருக்கு உத்தரவு போட முடியாது என வழக்கை தள்ளுபடி செய்தது. இதனால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

 

இரண்டு வருடங்களுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த வழக்கு கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகருக்கு காலக்கெடு விதிக்க முடியாது. இருந்தாலும் இந்த பிரச்சினையில் சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாக கூறி வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது.

 

இதைத் தொடர்ந்து கடந்த இரு நாட்களுக்கு முன்பு ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். விளக்கம் அளிக்க ஒரு வாரம் அவகாசம் அறிவித்திருந்த நிலையில், இந்த நோட்டீசுக்கு பதில் அளிக்க ஒரு மாத அவகாசம் வழங்க வேண்டும் வேண்டும் என துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon