பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி கடத்தப்பட்ட சிறுவன்..!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வேணு. இவருக்கு நான்கு வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. குழந்தை, அருகில் உள்ள பள்ளியில் படித்து வருகிறான். இன்று பிற்பகல் பள்ளி முடிந்து குழந்தையை அவரது தந்தை வேணு வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்தார்.
வீட்டினுள் குழந்தையுடன் வாகனத்தை ஏற்றிய வேணு, பிறகு குழந்தையை இறக்கிவிட்டு, வண்டியை நிறுத்தினார். அப்போது திடீரென ஓடிவந்த ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் ஒருவர், வேணுவின் முகத்தில் மிளகாய்ப்பொடி தூவிவிட்டு, சிறுவனை தூக்கி, தயாராக இருந்த காரில் ஏற்றினார். குழந்தையை தூக்கிச் சென்ற நபரை துரத்திய வேணு, காரில் இருந்த அந்த நபரை பிடிக்க முற்பட்டார்.
ஆனால், கார் வேணுவை இழுத்தபடி நகர்ந்து செல்ல அவர் சாலையில் அப்படியே விழுந்தார். பின்னர் அந்தக் கும்பல் சிறுவனை கடத்திச் சென்றது. உடனடியாக இது குறித்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரைப் பெற்றதும் நடவடிக்கையில் இறங்கிய காவல்துறை, உடனடியாக சிறுவன் வீட்டின் வெளியே இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், சிறுவனை அவரது தந்தை வேணு அழைத்து வருவதும், அப்போது சில அடி தூரத்தில் கர்நாடகா பதிவெண் கொண்ட ஒரு கார் நிற்பதும், அதில் இருந்து ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் ஒருவர் கீழே இறங்கி சரியான நேரத்திற்கு காத்திருப்பதும் பதிவாகியுள்ளது. மேலும், வேணுவின் வண்டி வீட்டிற்குள் சென்றதும், அந்த கார் அவர் வீட்டின் கதவு அருகே சென்று நிற்கிறது.
அந்த சமயத்தில் வேணு வீட்டு கதவுக்குள் நுழையும் காரில் இருந்து இறங்கிய ஹெல்மெட் மர்ம நபர், நொடிப் பொழுதில், வேணு மீது மிளகாய்ப்பொடி தூவிவிட்டு, சிறுவனை கடத்தி காரில் ஏற்றிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. சற்றும் தாமதிக்காத காவல்துறை, உடனடியாக 4 தனிப்படைகளை அமைத்து சிறுவனை தேடும் பணியில் இறங்கியது.
இதற்குள் மூன்று மணி நேரத்திற்குள் வேலூர் – ஆம்பூர் சாலையில் உள்ள மாதனூர் பகுதியில் இருந்து காவல்துறைக்கு ஒரு சிறுவன் தனியாக சாலை ஓரம் நிற்பதாக தகவல் கிடைத்தது. இதனை அடுத்து உடனடியாக அப்பகுதி காவல்துறையினர் அங்கு சென்று அந்தச் சிறுவனை மீட்டனர். பின்னர் அவரை புகைப்படம் எடுத்து குடியாத்தம் காவல்துறைக்கு அனுப்ப, அவர்கள் வேணுவின் குடும்பத்தாரிடம் காட்டினர்.
அப்போது, அது கடத்தப்பட்ட வேணுவின் குழந்தைதான் என்பதை குடும்பத்தினர் உறுதி செய்தனர். இதனை அடுத்து குழந்தை குடியாத்தம் அழைத்து வரப்பட்டது. காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், கடத்தல்காரர்கள் சிறுவனை இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர். தற்போது சிறுவனை மீட்டுள்ள காவல்துறை, கடத்தல்காரர்கள் யார், எதற்காக கடத்தினார்கள் உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்திவருகிறது.






