ஆனந்தம் தருமா திருப்பூர் வடக்கு? * ஆனந்தனுடன் மல்லுக்கட்டும் ரவி.. * ட்விஸ்ட் தர காத்திருக்கும் சத்யபாமா!
தமிழகத்தின் தொழில் வரைபடத்தில் தவிர்க்க முடியாத புள்ளி திருப்பூர். பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் அதீத நகரமயமாக்கல் காரணமாக, 2008-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது பிரிக்கப்பட்ட ஒரு முக்கிய அங்கம்தான் திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி.
வடக்கின் வரலாறும் வாழ்வாதாரமும்!
தமிழ்நாட்டின் 113-வது தொகுதியான இது, திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. சுமார் 3,79,139 வாக்காளர்களைக் கொண்ட இந்தத் தொகுதியில், ஆண்கள் 1,94,139 பேர் மற்றும் பெண்கள் 1,84,903 பேர் என கிட்டத்தட்ட சரிசமமான பலத்துடன் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 97 பேர் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றக் காத்திருக்கின்றனர்.
திருப்பூர் மாநகராட்சியின் 29 வார்டுகள் மற்றும் 10 ஊராட்சிகளை உள்ளடக்கிய இப்பகுதியில் பின்னலாடைத் தொழில் தான் உயிர்நாடி. 5,000-க்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் லட்சக்கணக்கானோருக்கு வாழ்வாதாரம் வழங்குகின்றன. சமூக ரீதியாகப் பார்த்தால், கொங்கு வேளாள கவுண்டர்கள் மற்றும் செங்குந்த முதலியார் சமூகத்தினர் இங்கு கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். இவர்களின் வாக்குகளே இங்கு வெற்றியைத் தீர்மானிக்கும் பிரதான சக்தியாகப் பார்க்கப்படுகிறது.
தீராத தாகமும் தேங்கும் திட்டங்களும்!
தொழில் நகரம் என்ற பெருமைக்கு இணையாக, திருப்பூர் வடக்கில் சவால்களும் ஏராளம். பின்னலாடைத் தொழிலுக்குத் தேவையான நூல் விலை ஏற்ற இறக்கம் மற்றும் ஏற்றுமதிச் சிக்கல்கள் ஒருபுறம் இருக்க, அடிப்படை வசதிகளில் இன்னும் பல ஓட்டைகள் உள்ளன. குறிப்பாக, சாயக்கழிவு நீர் மேலாண்மை மற்றும் நொய்யல் ஆற்றின் தூய்மை என்பது பல தசாப்த காலப் போராட்டமாகவே நீடிக்கிறது. போக்குவரத்து நெரிசல் என்பது திருப்பூர் வடக்கின் சாபக்கேடு.

செட்டிபாளையம், நெரிப்பெரிச்சல் போன்ற பகுதிகளில் சாலை விரிவாக்கப் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதாகப் புகார்கள் உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, இப்பகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கையான இ.எஸ்.ஐ. மருத்துவமனைக் கட்டுமானப் பணி இழுபறியாகவே இருப்பது தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயம் சார்ந்த ஊராட்சிகளில் பாசன வசதி மற்றும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது எனப் பிரச்சினைகளின் பட்டியல் நீள்கிறது. இதற்கு காரணம், தொகுதி அதிமுக வசம் உள்ளதால், திமுக அரசு பாரபட்சமாக செயல்பட்டதாக, இலைத் தரப்பில் குற்றச்சாட்டு உள்ளது.
வளர்ச்சிக்கான முன்னெடுப்பு திட்டங்கள்!
சவால்கள் ஒருபுறம் இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்கப் பணிகள் இங்கு முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சுமார் 1,063 கோடி ரூபாய் மதிப்பிலான கூட்டு குடிநீர் திட்டம் மக்களின் தாகம் தீர்க்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்த 200 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. கல்வி மற்றும் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யப் புதிய பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் 24 கோடி ரூபாய் மதிப்பிலான துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போதைய எம்.எல்.ஏ விஜயகுமார் தொகுதிக்குள் எளிதில் அணுகக்கூடிய நபராக இருந்து, பல உள்ளூர் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டுள்ளார். திமுக ஆட்சிக் காலத்தில் மாநகராட்சிப் பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பூங்காக்கள் மற்றும் சந்தைப் பகுதிகள் நவீனப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு வராதது எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
அதிமுக கோட்டைக்குள் வாள் சுழற்றும் கம்யூனிஸ்ட்!
திருப்பூர் வடக்கு தொகுதியில் திமுக நேரடியாகப் போட்டியிடாமல், தனது கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு (CPI) இந்த இடத்தை ஒதுக்கியுள்ளது. இங்கு கம்யூனிஸ்ட் வேட்பாளராக ரவி (எ) சுப்பிரமணியன் களம் காண்கிறார். 58 வயதான இவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாநகர மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

திருப்பூரின் அச்சாணியாக இருக்கும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் பல தசாப்தங்களாக வீதியில் இறங்கிப் போராடியவர் இவர். சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் என்பதால், தொழிலாளர் வாக்குகள் இவருக்குப் பெரும் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவின் தேர்தல் இயந்திரமும், கம்யூனிஸ்டுகளின் அடிமட்டத் தொண்டர் பலமும் இணைந்து இவரை ஒரு வலுவான போட்டியாளராக மாற்றியுள்ளது.
மீண்டும் வருகை தந்த ஆனந்தன்!
அதிமுகவைப் பொறுத்தவரை திருப்பூர் வடக்கு என்பது ஒரு ராசியான மற்றும் பலமான தொகுதி. இங்கு முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் மீண்டும் களம் இறக்கப்பட்டுள்ளார். பல்லடம் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ-வாக இருக்கும் ஆனந்தன், தனது சொந்த ஊரான திருப்பூருக்கே மீண்டும் திரும்பியுள்ளார். 2011-ல் இதே தொகுதியில் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற வரலாறு இவருக்கு உண்டு. ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் வனத் துறை அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்களுடன் நேரடித் தொடர்பு கொண்டவர் என்பது இவரின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட். “திருப்பூரின் வளர்ச்சியைத் தொடங்கி வைத்ததே நாங்கள்தான்” என்ற முழக்கத்தோடு அவர் வலம் வருகிறார். சிட்டிங் எம்.எல்.ஏ. விஜயகுமார் அமைதியானவர்; தொகுதியில் இவருக்கு இருக்கும் நற்பெயரும், ஆனந்தனின் அரசியல் அனுபவமும் சேரும்போது அதிமுக இங்கு இமாலய பலத்துடன் காட்சியளிக்கிறது. உட்கட்சிப் பூசல்களைச் சரிசெய்து, பழைய செல்வாக்கை மீட்கும் முனைப்பில் அவர் தீவிரமாக உள்ளார்.
மும்முனைப் போட்டியில் ‘ட்விஸ்ட்’ கொடுக்கும் தவெக!

திருப்பூர் வடக்கின் களம் இப்போது நான்கு முனைப் போட்டியாகத் தெரிந்தாலும், நிஜமான யுத்தம் அதிமுக, திமுக கூட்டணி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையேதான் நடக்கிறது. இதில் ‘எக்ஸ்’ காரணியாக நுழைந்துள்ளார் தவெக வேட்பாளர் சத்யபாமா. முன்னாள் அதிமுக எம்பியான இவர், 2025-ல் விஜய்யின் கட்சியில் இணைந்தது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஏற்கனவே எம்பியாக இருந்தபோது தொகுதி முழுவதும் அறிமுகமான முகம் என்பது இவருக்குப் பெரிய பலம். இவர் பிரிக்கும் வாக்குகள் யாரைப் பாதிக்கும் என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி. அதிமுக, திமுகவின் பாரம்பரிய வாக்குகளை இவர் பிரித்தால், யாருக்கு வென்றி என்பது கணிக்க இயலாத ஒன்றாகிவிடும். கடந்த கணிசமாக வாக்கு வாங்கி, 3ஆம் இடத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் அபிநயா பிரேம்குமார் இளம் வாக்காளர்களைக் குறிவைத்துச் செயல்படுகிறார்.
தற்போதைய நிலவரப்படி, அதிமுக தனது கோட்டையைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் முன்னிலையில் இருப்பது போலத் தெரிகிறது. இருந்தாலும், தவெக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் பிரிக்கும் வாக்குகள் முடிவை மாற்றியமைக்கலாம். “யாருடைய ஓட்டை யார் பிரிக்கப் போகிறார்கள்?” என்பதில் தான் வெற்றியின் ரகசியம் ஒளிந்திருக்கிறது.
கடைசி நேரப் பணப்பட்டுவாடா மற்றும் நட்சத்திரப் பேச்சாளர்களின் வருகையானது, நடுநிலை வாக்காளர்களின் மனதை மாற்றக்கூடும். மொத்தத்தில், திருப்பூர் வடக்கில் இந்த முறை அரசியல் பின்னல்கள், சிக்கல்கள் நிறைய உள்ளன என்பதே தற்போதைய கள நிலவரமாகும்.





