தேசிய கல்விக் கொள்கையை வைத்து எங்களை மிரட்ட முடியாது – தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் பதில்
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் நிதி ஒதுக்குவோம் என எங்களை மிரட்டி அடிப்பணிய வைக்க முடியாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ மாணவியர்களுக்கு பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அதற்காக தமிழக அரசு சார்பில் குறைவான தொகை மட்டுமே வழங்குவதாக தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் 2024-2025 ம் ஆண்டு கல்வி கட்டணமாக நிர்ணயித்த கட்டணத்தையும், 2025-2026 ம் கல்வி ஆண்டில் மாற்றியமைக்கப்பட்ட, உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தையும் செலுத்த அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய கட்டணத்தை வழங்கவில்லை எனக் கூறி தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது இந்த வழக்கு நீதிபதி எம் தண்டபாணி முன்பு விசாரணை வந்த போது பள்ளிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற உத்தரவின் படி உரிய தொகை வழங்கப்படவில்லை என்று வாதிட்டார்.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 60 சதவீத நிதியை ஒன்றிய அரசு தர வேண்டும் என்றும் 40 சதவீத தொகையை மாநில அரசு வழங்க வேண்டும் என்ற நிலையில் தேசிய கல்விக் கொள்கையை ஏற்று கொண்டால் மட்டுமே மத்திய அரசின் நிதி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் நிதி கொடுப்பார்களே என தெரிவித்ததற்கு, மத்திய அரசின் இந்த மிரட்டலுக்கு தமிழக அரசு என்றும் அடிபணியாது என்றும் இதுகுறித்து உரிய அறிக்கையை தாக்கல் செய்யப்படும் எனவும் விளக்கமளிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 24 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.






