--- --:--:-- --

மகளிர் உரிமைத் தொகையில் மேலும் தளர்வுகள்..!

1

களிர் உரிமைத் தொகை திட்டத்தில் விதிக்கப்பட்டிருக்கும் சில விதிகளை தளர்த்திவிட்டதாகவும், இரண்டு மாதங்களில் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வரும் எனவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுப்பட்டவர்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் படிப்படியாக ஆய்வு செய்யப்படுகின்றன. மேலும் உங்களுடன் ஸ்டாலின் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு 45 நாட்களுக்குள் பதில் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த முகாம்கள் நகர்ப்புறங்களில் 13 துறைகளின் 43 சேவைகளையும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளின் 46 சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கி வருகின்றன. இதன் மூலம், மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு அருகிலேயே சாதிச் சான்றிதழ், பட்டா மாற்றம், ஓய்வூதியம், முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மற்றும் ஆதார் அட்டையில் திருத்தங்கள் போன்ற பல்வேறு அத்தியாவசிய சேவைகளைப் பெற்று வருகின்றனர்.

 

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்டு ஆகஸ்ட் 28ஆம் தேதியுடன் 45 நாட்கள் நிறைவடைந்த நிலையில், அடுத்த சில நாட்களில் முதல் கட்ட பயனாளிகளின் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

இந்த நிலையில் இன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “நான் வாரத்தில் நான்கு, ஐந்து நாள்கள் வெளி மாவட்டங்களில் சுற்றுப் பயணத்தில் இருப்பேன். அப்போது பல இடங்களில் கூட்டமாக பெண்கள் நிற்பார்கள்.

 

அவர்களை சந்திப்பதாக வாகனத்தை நிறுத்துவேன். அப்போது சிலர் மனுக்களை கொடுப்பார்கள். சிலர், ‘தம்பி அப்பாக்கிட்ட சொல்லிடுங்க ரூ. 1000 வந்துடுச்சு’ என சொல்லி நன்றி சொல்ல சொல்வார்கள். சிலர், ‘அவருக்கு வந்துவிட்டது எனக்கு வரவில்லை. என்ன காரணம் என சொல்ல மாட்டுகிறார்கள்’ என்பார்கள்.

 

தற்போது தலைவர் அதில் இருக்கும் சில விதிகளை தளர்த்திவிட்டார். நிச்சயமாக சொல்கிறேன், இன்னும் இரண்டு மாதங்களில் தகுதிவாய்ந்த இன்னும் கூடுதலான மகளிருக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’யை தலைவர் கொடுப்பார்.” எனப் பேசினார்.

Right Menu Icon