விஜய் நாளை எங்கு பிரச்சாரம் செய்கிறார்?
தவெக தலைவர் விஜய், ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்’ எனும் தலைப்பில், தேர்தல் பிரச்சாரச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், நாளை (27ஆம் தேதி) நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
கடந்த 13ஆம் தேதி திருச்சி மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் தனது தேர்தல் பிரச்சாரப் பயணத்தை துவங்கிய விஜய், ஒவ்வொரு சனிக்கிழமையும், இரண்டு மாவட்டங்களில் தனது பயணத்தை மேற்கொண்டுவருகிறார். அதன்படி நாளை (27ஆம் தேதி) நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் தனது பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்.
இந்தநிலையில், அவர் பிரச்சாரம் செய்யப்போகும் இடம், மற்றும் நேரம் குறித்து தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், பிரச்சாரம் மேற்கொள்ளும் மாவட்டங்களில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், “விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நாளை (27ஆம் தேதி) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் நடைபெற உள்ளது. நாமக்கல்லில் கே.எஸ். திரையரங்கம் அருகில் காலை 8.45 மணிக்கும், கரூரில், வேலுச்சாமிபுரம் பகுதியில், நண்பகல் 12 மணிக்கும் நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.






