தடையை மீறி விநாயகர் சிலையா? “அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்!!” உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்தால் பரபரப்பு!!
???????????????????????????????????????????????????????????????????????????
தடையை மீறி விநாயகர் சிலை நிறுவினால் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளனர். தடையை மீறுவோம் என இந்து அமைப்புகள் கூறி வரும் நிலையில் இப்பிரச்னையில் நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்தால் தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவே தெரிகிறது.
கொரோனா காரணமாக இந்தாண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை பொது இடங்களில் நிறுவவும், ஊர்வலத்திற்கும் தமிழக அரசு விதித்துள்ளது. இதற்கு பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்தத் தடையை நீக்க வேண்டும் எனவும், கட்டுப்பாட்டுடன் விழாவை நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பாஜக தலைவர் எல். முருகன் நேரடியாக சந்தித்தும் வேண்டுகோள் விடுத்தார்.
விநாயகர் சிலை வைக்க தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கும் தொடரப்பட்டது, ஆனால் நீதிபதிகளோ, நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவி வரும் நிலையில், விநாயகர் சிலை வைக்க அனுமதி கொடுப்பது எப்படி? என கேள்வி எழுப்பியதுடன், வழக்கை திரும்பப்பெறுமாறு கண்டிப்பு காட்டியுள்ளனர்.
இந்நிலையில் அரசின் தடை உத்தரவை மீறுவோம் என்றும் தடையை மீறி சிலைகள் நிறுவப்படும் எனவும் இந்து முன்னணி கட்சியினர் தெரிவித்துள்ளது . தமிழகத்தில் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. இதனால் மூத்த பத்திரிகையாளர் வி. அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். மனுவில், தடையை மீறி சிலை நிறுவப்படும் என இந்து முன்னணியினர் மிரட்டல் விடும் தொனியில் கூறியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்தால் பரபரப்பு
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், இது போன்ற மிரட்டல்களிலிருந்து அரசை பாதுகாப்பது நீதிமன்றத்தின் வேலை இல்லை. அரசு உத்தரவுகள் மீறப்பட்டால் அதை தமிழக அரசு கவனித்து கொள்ளும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
மேலும், விநாயகர் சதுர்த்தியன்று தடையை மீறி சிலை வைக்கவும், ஊர்வலம் செல்லவும் முற்படுபவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் எனவும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கருத்து தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த பதற்றமான பிரச்னையில் தமிழக அரசின் நடவடிக்கை என்ன? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.







