மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட வாக்குப்பதிவு… ஆர்வமுடன் வாக்களிப்பு
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் இன்று 2- ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி, விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
மம்தா பானர்ஜி முதல்வராக உள்ள மேற்கு வங்கத்தில், 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. முதல்கட்ட தேர்தல் முடிந்தநிலையில், 2-ம் கட்ட தேர்தல் இன்று (வியாழக்கிழமை) 30 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இதற்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 30 தொகுதிகளில் 191 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் முடிவு செய்யப்படுகிறது. இதற்காக 10 ஆயிரத்து 620 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்காக 651 கம்பெனி மத்திய போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தேர்தலில் முக்கிய தொகுதிகளாக முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியும் அடங்கும். அங்கு அவருக்கு எதிராக பா.ஜ.க. சார்பில் முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரி களம் காண்கிறார். இவர், சில மாதங்களுக்கு முன்புதான் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
கொரோனா கால விதிமுறைகளின்படி வாக்காளர்கள் முககவசம் அணிந்து வர வேண்டும். வாக்குச்சாவடிகளில் வெப்ப பரிசோதனைக்கு வாக்காளர்கள் உட்படுத்தப்பட்டு, கையுறை அணிந்துதான் வாக்கு அளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
அதேபோல், வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமிலும் இன்று 2- ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அசாமில் 39 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இன்று களமிறங்கிய 345 வேட்பாளர்களில் 5 பேர் அமைச்சர்கள் ஆவார்கள்.





