வாகனத்தில் அமர்ந்து கைக்காட்டுவது அரசியல் அல்ல – காரைக்குடியில் அண்ணாமலை பரப்புரை
காரைக்குடியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: “இந்தத் தேர்தல் வெறும் வேட்பாளர்களுக்கான போட்டி மட்டுமல்ல, இது ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல். தி.மு.க ஆட்சியை வெளியேற்றி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை அரியணையில் ஏற்றுவதே இத்தேர்தலின் முக்கிய நோக்கம். வெறும் வாகனத்தில் அமர்ந்து கைக்காட்டுவது அரசியல் அல்ல; காமராஜர் ஐயா போன்ற தலைவர்கள் ஒன்பது ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து, தியாகம் செய்து அரசியலை முன்னெடுத்தனர்.
இன்றைய அரசியல்வாதிகள் அத்தகைய கஷ்டங்களை அறிந்தவர்கள் அல்ல. குறிப்பாக, தமிழகத்தில் இம்முறை ஒரு கோடியே 28 லட்சம் இளம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த மாற்றமும் எழுச்சியும் இளைஞர்களுக்காகத்தான். இதுவரை எந்த அரசியல் அனுபவமும் இல்லாதவர்களை வைத்து ஆட்சி அமைப்பதால் எந்தப் பயனும் இல்லை. எனவே, ஒரு நேர்மையான மாற்றத்திற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும் ஆதரவளிக்க வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டார்.





