மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் களப்பணியாற்ற தொண்டர்களுக்கு அழைப்பு..!
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களுக்கு தேவையான உணவு, உடை, மருத்துவ வசதி, மருந்து, மாத்திரைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் என்று கட்சி தொண்டர்களை அதிமுக கேட்டுக்கொண்டுள்ளது.
அரசின் நடவடிக்கைகளுக்கு காத்திராமல் தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என்றும் அந்த கட்சி வலியுறுத்தியுள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக நிவாரண முகாம்களுக்கு அழைத்து செல்ல கட்சி தொண்டர்கள் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
மக்கள் அனைவருக்கும் வயிறார உணவு கிடைத்தால் ஏற்பாடு செய்யவேண்டும் என்றும், எங்கெல்லாம் மருத்துவ வசதிகள் தேவையோ அங்கெல்லாம் அதிமுக மருத்துவர்கள் முகாம் அமைத்து பணியாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை வழங்கும் பணிகளில் தொண்டர்கள் முழுமையாக ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.






