“விஜயகாந்த் பூரண நலமுடன் உள்ளார்” லேசான கொரோனா அறிகுறி சரி செய்யப்பட்டுவிட்டது..! தேமுதிக தலைமை கழகம் அறிக்கை!!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலத்துடன் உள்ளார் எனவும் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது லேசான கொரோனா அறிகுறி இருப்பது உறுதியாகி சரி செய்யப்பட்டு விட்டதாகவும் தேமுதிக தலைமை கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், நேற்றிரவு திடீரென தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று என்றும், கடும் மூச்சத் திணறல் என்றும் செய்திகள் வெளியாகி, தேமுதிக தொண்டர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியும், கவலையும் அடையச் செய்தது.
இந்நிலையில், விஜயகாந்த் உடல் நிலை தொடர்பாக தேமுதிக தலைமைக் கழகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் அவர்கள் பூரண உடல்நலத்துடன் உள்ளார். லேசாக தென்பட்ட கொரோனா அறிகுறி, உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டது. 6 மாதத்திற்கு ஒருமுறை வழக்கமான உடல் பரிசோதனைக்காக, விஜயகாந்த் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம்.

பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு சென்ற போது தென்பட்ட லேசான கொரோனா அறிகுறி சரிசெய்யப்பட்டது. தற்போது விஜயகாந்த் பூரண நலத்துடன் உள்ளார் என தேமுதிக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும், விஜயகாந்த் அபிமானிகளும் சற்றே ஆறுதல் அடைந்துள்ளனர்.
இதற்கிடையே விஜயகாந்த் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும், திரையுலகினரும் தெரிவித்துள்ளனர்.







