குட்கா விவகாரம் : மு.க. ஸ்டாலின் உட்பட திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸ் … இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்றம்!!
சட்டப்பேரவையில் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் உட்பட திமுக எம்எல்ஏக்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தடை செய்யப்பட்ட குட்காவை, சட்டப் பேரவைக்குள் எடுத்து சென்றதாக, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.,க்கள் 21 பேரிடம் விளக்கம் கோரி சட்டசபை உரிமைக்குழு, நோட்டீஸ் அனுப்பியது. நோட்டீசை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 21 பேரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசில் அடிப்படை தவறுகள் இருப்பதால், நடவடிக்கை எடுக்க முடியாது என தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான முதல் பெஞ்ச் ஏற்கனவே உத்தரவிட்டது.
இதையடுத்து, கடந்த 7-ந் தேதி சட்டப் பேரவை உரிமைக்குழு கூடி அன்றே சட்டசபை செயலர் மீண்டும் ஒரு நோட்டீஸ் அனுப்பினார். இதை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுக்கள், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன், நேற்று விசாரணைக்கு வந்த போது, இந்த மனு மீது இன்று
இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று காலை இந்த வழக்கில் நீதிபதி சத்தியநாராயணா பிறப்பித்த இடைக்கால உத்தரவில், மறுஉத்தரவு வரும் வரை, 2-வதாக அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கில், சபாநாயகர், பேரவை செயலாளர், உரிமைக்குழு தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.








