பாஜக மகளிரணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்
பாஜக மகளிரணி தேசிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.சமீபத்தில் பாஜக தேசிய நிர்வாகிகள் பலர் நியமிக்கப்பட்டனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. தேசியச் செயலாளர் பொறுப்பில் இருந்த மூத்த தலைவரான எச்.ராஜாவும் கழட்டி விடப்பட்டு அவருக்கும் எந்தப் பொறுப்பும் வழங்கப்படாதது தமிழக பாஜகவை டெல்லி மேலிடம் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கிறதோ என்ற சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பாஜக மகளிரணியின் தேசிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த வானதி சீனிவாசனை நியமித்து அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இன்று உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த வானதி சீனிவாசன், தமிழக பாஜக துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து வருபவர் என்பதும், கட்சியில் பல காலமாக துடிப்புடன் செயல்பட்டு வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் பொறுப்பு வகித்த எச். ராஜாவுக்கு எந்த புதிய பொறுப்பும் வழங்கப்படவில்லை. அவர் ஏதாவது ஒரு மாநிலத்துக்கு ஆளுநராக நியமிக்கப்படலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.





