உன்னாவ் பாலியல் வழக்கு : பாஜக எம்எல்ஏவுக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனை!!
உன்னாவ் சிறுமி பாலியல் வழக்கில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காருக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனையும் 25 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து பரபரப்பான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில், கடந்த 2017-ம் ஆண்டு சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் என்பவர் மீது வழக்கு தொடரப்பட்டு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் கைது செய்யப்பட்டார் .இது தொடர்பான வழக்கு உபி தலைநகர் லக்னோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சம்பவம் நடைபெற்றபோது அந்தப்பெண் சிறுமியாக இருந்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் செங்கார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சிபிஐக்கும் மாற்றப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் அந்தப் பெண் தனது உறவினர்களுடன் காரில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் அந்த பெண்ணும் அவரது வழக்கறிஞரும் பலத்த காயமடைந்தனர். பெண்ணின் உறவினர்கள் இருவர் உயிரிழந்தனர் .
இதில் படுகாயம் அடைந்த அந்தப் பெண் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் . இந்த விபத்து தொடர்பாக குல்தீப் சிங் செங்கார் மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து குல்தீப்சிங் செங்கார் பாஜகவிலிருந்தும் நீக்கப்பட்டார்.
இந்த கொலை முயற்சி சம்பவத்தையடுத்து, சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை டெல்லி மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும், இந்த வழக்கை தினசரி விசாரிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி முதல் விசாரணை நடைபெற்று கடந்த திங்கட்கிழமை இந்த வழக்கில் குல்தீப் சிங் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேலும் தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று இந்த வழக்கில் குல்தீப் சிங் செங்காருக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனையும், பாதிக்கப்பட்டு பெண்ணுக்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.





