லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக மத்திய அமைச்சர் மகன் கைது..!
உத்திரபிரதேசத்தில் லக்கிம்பூரில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மீரா கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை லக்கிம்பூரில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது விவசாயிகள் மீது கார் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் மேலும் 4 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ள காவல்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஸ்மிஸ்ராவுக்கு சம்மன் அனுப்பியது. அவர் ஆஜர் ஆகாத நிலையில் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதையடுத்து லக்கிம்பூர் காவல் நிலையம் சென்ற ஆசிஷ் மிஸ்ராவை சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர். அவரிடமிருந்து செல்போன்களை கைப்பற்றிய காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்பொழுது சம்பவத்தன்று அந்த பகுதியில் தான் இல்லை என்பதற்கான வீடியோ ஆதாரங்களை அளித்ததாக கூறப்படுகிறது. எனினும் விசாரணைக்கு பிறகு ஆசிஸ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார். இதனிடைய ஆசிஸ் மிஸ்ராவை கைது செய்யக்கோரி பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சித்து நடத்திய போராட்டத்தை விலக்கிக் கொண்டார்.
லக்கிம்பூர் வன்முறையில் கொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளர்களின் வீட்டின் முன்பு போராட்டம் மேற்கொண்டிருந்தார் .
இந்த சூழ்நிலையில் வன்முறை குறித்து விசாரிப்பதற்காக உத்திரப்பிரதேச அரசு சார்பில் அமைக்கப்பட்ட அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஓய்வுப் பெற்ற நீதிபதி பிரதீப் குமார் தலைமையிலான ஒரு நபர் குழு தனது விசாரணையை துவங்கியுள்ளது. இரண்டு மாதத்திற்குள் இந்த குழு தனது விசாரணை அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது.







