கொரோனாவுக்கு மாத்திரை சப்ளை செய்ய முடியுமா..? இல்லை பதிலடி கொடுக்கவா..? இந்தியாவை மிரட்டும் டிரம்ப்!!.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகளை சப்ளை செய்யாவிட்டால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என இந்தியாவுக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுவது போல அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் மிகப்பெரும் வல்லரசு நாடான அமெரிக்கா, பெரிய அண்ணன் மனப்பான்மையில் உலக நாடுகளை ஏகத்துக்கும் அச்சுறுத்தி வருவதையே வாடிக்கையாக கொண்டுள்ளது. தான் உற்பத்தி செய்யும் பொருட்களை வாங்க வேண்டும் என்று உலக நாடுகளை நிர்ப்பந்திப்பதும், இல்லையானால், பிற நாடுகளை துணைக்கு அழைத்துக் கொண்டு பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதிப்பது அல்லது போர்ப் பதற்றத்தை உருவாக்குவதிலும் கைதேர்ந்த நாடு அமெரிக்கா.
ஆனால், கொரோனா வைரஸ் தாக்குதல் , அமெரிக்காவை ஒட்டு மொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது. உலகிலேயே வைரஸ் தாக்குதலுக்கு அதிகம் பேர் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா திகழ்கிறது. கொரோ வைரஸ் அங்கு அதிவேகமாக பரவி, வல்லரசு நாடான அமெரிக்காவால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு விஸ்வரூபமெடுத்து வருகிறது. இதனால் உலக மொத்த பாதிப்பில் (13.5 லட்சம்) கால்வாசிப் பாதிப்பு (3.5 லட்சம்) அமெரிக்காவில் நிகழ்ந்து, உயிரிழப்பும் 10% சதவீதம் என்ற அளவில் 10 ஆயிரத்தை கடந்துள்ளது. ஆனால் இனிமேல் தான் அமெரிக்காவில் அதிக உயிரிழப்புகள், அதுவும் இந்த ஒரு வாரத்தில் நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளிப்படையான கூறி வருகிறார்.

இப்படி உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு இன்னும் உரிய மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், மலேரியா சிகிச்சைக்கு வழங்கப்படும் ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகள் ஓரளவுக்கு இந்த வைரஸை கட்டுப்படுத்துவதாக அமெரிக்கா நம்புகிறது. ஆனால் இந்த மாத்திரைகளுக்கும் அமெரிக்காவில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இந்த மாத்திரையை அமெரிக்காவுக்கு அதிகம் சப்ளை செய்து வருவதே நம் இந்தியாதான்.
ஆனால், இந்தியாவிலும் கொரோனா புயல் வீச ஆரம்பித்ததால், முன் ஜாக்கிரதையாக வெளிநாடுகளுக்கு இந்த மாத்திரையை ஏற்றுமதி செய்வதை இந்தியா கடந்த ஒரு மாதமாக அடியோடு நிறுத்திவிட்டது.இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன் பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய டிரம்ப், ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகளை வழங்கி அமெரிக்காவை காப்பாற்றுமாறு அன்பாக வேண்டுகோள் விடுத்தார். இந்தியாவும் தமது கோரிக்கையை நிறைவேற்றும் என நம்புவதாக அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.
ஆனால் இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் விஸ்வரூபமெடுத்துள்ளதால், மாத்திரைகளை வழங்க இந்தியா யோசிக்கிறது .இந்நிலையில் அமெரிக்காவில் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து நிலைமை மோசமாகி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வழக்கமான தனது பெரிய அண்ணன் போக்கை கையாளத் தொடங்கியுள்ளார்.வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், மாத்திரைக்காக ஏற்கனவே ஆர்டர் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்தியா சப்ளை செய்ய வேண்டும். ஒப்பந்தத்தை மதித்து சப்ளை செய்தால் இந்தியாவை பாராட்டுவேன்.
அப்படி சப்ளை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. எப்படி Uதிலடி கொடுக்க வேண்டுமோ தக்க பதிலடியை இந்தியாவுக்கு அமெரிக்கா கொடுக்கும் என டிரம்ப் மிரட்டல் தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சகட்டத்தில் இருக்கும் பட்சத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்த மிரட்டல் இரு நாடுகளிடையே திடீர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகளை சப்ளை செய்து உதவுமாறு இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவும் கெஞ்சாத குறையாக இப்போது இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றன. இதனால் இந்த மாத்திரை உற்பத்தியை அதிகரிப்பது குறித்து தீவிர ஆலோசனை நடைபெற்று வருவதாக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




