இருசக்கர வாகனத்தில் சென்றவர் பின்னால் வந்த லாரி மோதி உயிரிழப்பு..!
அரியலூர் மாவட்டம் வி கைகாட்டியில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் லாரி மோதி உயிரிழந்த விபத்தில் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ஒரத்துரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் இளநீர் வியாபாரம் செய்து வந்தார். இளநீர்களை கொள்முதல் செய்ய வி கைகாட்டியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது பின்னால் வந்த லாரி ஒன்று எதிர் திசையில் வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக இடதுபுறம் கவனக்குறைவாக திரும்பியபோது ஓரமாக சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மீது உரசியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ராஜேந்திரன் மீது லாரி ஏறியதில் உடல் நசுங்கி அவர் உயிரிழந்தார். சாலை விரிவாக்கப் பணியை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள மாற்று சாலை குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நிகழ்வதாக புகார் கூறப்படுகிறது.







