தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: பிப்.25 ரஜினிகாந்த் நேரில் ஆஜராக உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்திற்கு வருகிற 25ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அருணா ஜெகதீசன் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் சார்பில் தூத்துக்குடியில் 2018 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தமிழக அரசு விசாரணை ஆணையத்தை அமைத்து உள்ளது. இந்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து விட்டு சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் வன்முறைக்கு சமூக விரோதிகளே காரணம் என கூறியிருந்தார்.
நடிகர் ரஜினிகாந்த் தான் தெரிவித்திருந்த கருத்துக்கள் தொடர்பாக வருகிற 25-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஏற்கனவே சீமான் உள்ளிட்ட பலருக்கு சம்மன் அளிக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையில், தற்போது ரஜினிகாந்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.






