ஆர்வத்துடன் வாக்களித்த திருப்பூர் கலெக்டர் & தொகுதி வேட்பாளர்கள் – படங்கள்!
திருப்பூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. கலெக்டர் விஜயகார்த்திகேயன், பிஷப் உபகாரசாமி பள்ளியில் வாக்கு செலுத்தினார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டத்திலும் 8 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாகவும் அமைதியாகவும் நடைபெற்று வருகிறது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பிஷப் உபகாரசாமி பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்து ஜனநாயகக் கடமையை செய்தார். வாக்காளர்கள் எவ்வித அச்சமுமின்றி வாக்களிக்க வர வேண்டும்; உரிய கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் க.செல்வராஜ் கொங்கு நகர், வெங்கடாஜலபதி ரோடு, 1வது ரயில்வே கேட் அருகில் உள்ள வெங்கடாஜலபதி மாநகராட்சி துவக்க பள்ளியில் பாகம் எண் 257ல் தனது வாக்கினை செலுத்தினார்.

திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம் ரவி என்கிற சுப்ரமணியம் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பாளையக்காடு முருகப்ப செட்டியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி எண் 41-ல் தனது வாக்கினை பதிவு செய்தார்.

அதிமுக சார்பில் திருப்பூர் வடக்கு தொகுதி வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ விஜயகுமார் தனது மனைவியுடன் அங்கேரிபாளையம் பகுதியிலுள்ள வி. கே அரசு மேல்நிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். இவருடன் மாற்று வேட்பாளராக போட்டியிடும் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன் உடன் வந்திருந்தார்.

திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் செல்வகுமார் சிறுபூலுவப்பட்டி அரசு பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். அதேபோல், மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.கே.செல்வராஜ் தனது சொந்த ஊரான ஆதி மாதையனூரில் வாக்களித்தார்.







