--- --:--:-- --

ஊரடங்கு நீட்டிப்பு எதிரொலி : மும்பையில் வெளிமாநில தொழிலாளர்கள் திடீர் போராட்டம்..! போலீஸ் தடியடியால் பதற்றம்!!

0ee58c1a-2356-4138-a679-265a0c1662ab

ஊரடங்கு மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மும்பையில் வசிக்கும் வெளியூர் மற்றும் மாநிலத் தொழிலார்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யுமாறு கோரி திடீரென் போராட்டத்தில் குதித்தனர். ஆயிரக் கணக்கில் திரண்ட தொழிலாளர்கள் ரகளையில் ஈடுபடத் தொடங்கியதால் போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

நாட்டின் வர்த்தகத் தலைநகராக திகழும் மும்பையில், பிழைப்பு தேடி தஞ்சம் புகுந்துள்ள வெளி மாநிலத் தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளர்கள் ஆவர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் திடீரென ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் இவர்கள் மும்பையிலேயே முடங்கியுள்ளனர். போக்குவரத்து வசதி இல்லாததால் சொந்த ஊர் திரும்ப முடியாமலும், வருவாய் இன்றி உணவுக்கும் சிரமப்படும் சூழலில் மும்பையில் பரிதவித்து வருகின்றனர்.

 

மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பும் நாட்டிலேயே அதிகமாக மும்பையில் தான் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து உயிரிழப்புகளும் கூடி வருகிறது. இதனால் வெளி மாநில தொழிலாளர்கள் மேலும் பீதியில் இருந்து வந்தனர். இந்நிலையில், இன்று நள்ளிரவுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில், மே 3-ந்தேதி வரை மேலும் 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதால் கூலித் தொழிலாளர்கள் மேலும் பதற்றமடையத் தொடங்கியுள்ளனர்.

 

இதனால், உணவு, தண்ணீர் கிடைக்காமலும், கொரோனா நோய்த் தொற்று அபாயத்திலும் உள்ள தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கோரி, இன்று போராட்டத்தில் குதித்தனர். மும்பையின் மையப் பகுதியான பாந்த்ராவில், ஆயிரக் கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், ரகளையிலும் ஈடுபடத் தொடங்கினர். இதனால் போலீசார் தடியடி நடத்தி தொழிலாளர்களை விரட்டியடித்ததால் பதற்றம் மேலும் அதிகரித்தது. இதைத் தொடர்ந்து மும்பையில் வெளி மாநில தொழிலாளர்கள் போராட்டம் மேலும் தீவிரமடையும் அபாயம் உள்ளதால் பதற்றம் நிலவுகிறது.

 

இந்நிலையில், மும்பையில் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே உடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.பாந்த்ராவில் நடைபெற்ற போராட்டம் , தடியடி கவலை அளிக்கிறது என்றும் இது போன்ற சம்பவங்கள் கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் என்றும் கூறிய அமித்ஷா, வெளி மாநில தொழிலாளர்களுக்கு உணவு, இருப்பிடம் போன்றவற்றை சம்பந்தப்vட்ட மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

 

மும்பையில் நடந்தது போன்றே குஜராத்திலும் 2 நாட்களுக்கு முன்பு வெளி மாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்தனர் .அந்தப் போராட்டத்தில் வன்முறை வெடித்து வாகனங்களுக்கு தீ வைத்த சம்பவங்களும் நடைபெற்றன. தற்போது ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் இது போன்ற போராட்டங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் வெடிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon