--- --:--:-- --

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்பு

11

தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டியை சேர்ந்த 79 வயதான மூதாட்டி வீரம்மாள் ஊராட்சி தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார்.

 

இரண்டு முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தவர் மூன்றாவது முறையாக போட்டியிட்டு 195 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் வீரம்மாளுக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பொது மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காண்பேன் என வீரம்மாள் தெரிவித்தார்.

 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஆராசூர் ஊராட்சி மன்ற தலைவராக பொறியியல் பட்டதாரி பிரபு பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆறு உறுப்பினர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத் குமார் கலந்துகொண்டார்.

 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள கள்ளக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவராக சித்திராங்கதன் என்பவர் பதவியேற்றார். தமக்கு வாழ்த்து தெரிவிப்பதற்கு பதிலாக மரக்கன்றுகளையும் எல்இடி விளக்குகளையும் வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

 

அதன்படி அவருக்கு மரக்கன்றுகளும் எல்இடி விளக்கங்களும் வழங்கப்பட்டன. தமது பஞ்சாயத்தை முதன்மையானதாகவும் பசுமையானதாகவும் மாற்ற வேண்டும் என்ற ஆசையில் தான் இவ்வாறு கூறியதாக சித்திராங்கதன் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon