234 தொகுதிகளில் பாயும் புலி! * பெரம்பூர் & திருச்சியில் விஜய் போட்டி! * கொங்கு மண்டல தவெக வேட்பாளர்கள்..
தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பை கூட்டி வருகிறது. அதற்கு உதாரணம் சென்னை நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடந்த தவெக வேட்பாளர்கள் கூட்டத்தை சொல்லலாம். “அரசியல்னா சும்மா இல்ல தம்பி…” என்று சவால் விட்ட பழைய முகங்களுக்கு மத்தியில், “நாங்க வந்தா இப்படித்தான் இருக்கும்” என அதிரடியாக வேட்பாளர் பட்டியலை இறக்கியிருக்கிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். 234 தொகுதிகளுக்கும் ஒரே மூச்சில் வேட்பாளர்களை அறிவித்து, கோட்டையை நோக்கி தன் முதல் அடியை பலமாக எடுத்து வைத்திருக்கிறார் ‘தளபதி’.

இரு தொகுதிகளில் விஜய் போட்டி!
எப்போதுமே ஒரு பாதுகாப்பான தொகுதியைத் தேடும் அரசியல் தலைவர்களுக்கு மத்தியில், வட சென்னையின் இதயப்பகுதியான பெரம்பூரையும், தமிழகத்தின் மையப்புள்ளியான திருச்சி கிழக்கையும் விஜய் தேர்ந்தெடுத்திருப்பது அரசியல் நோக்கர்களை புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.
பெரம்பூர் – இது தி.மு.க-வின் எஃகு கோட்டை. 9 முறை உதயசூரியன் உதித்த இடம். 1984-ல் இதே தொகுதியில்தான் அப்போதைய தி.மு.க இளைஞரணி முகமாக இருந்த பரிதி இளம்வழுதி, அ.தி.மு.க-வின் ஜாம்பவான் சத்தியவாணி முத்துவை வீழ்த்தி சரித்திரம் படைத்தார். இன்று அதே ‘யங் ரத்தம்’ பாணியில் விஜய் அங்கே களம் காண்பது, தி.மு.க-வின் வாக்கு வங்கியில் நேரடி கை வைக்கும் முயற்சி என்றே தெரிகிறது.
படைத் தளபதிகளும்… ஆச்சரிய வேட்பாளர்களும்!
மறுபுறம் திருச்சி கிழக்கு. ஆன்மீகமும் அரசியலும் பின்னிப்பிணைந்த மண். கடந்த முறை இனிகோ இருதயராஜ் மூலம் தி.மு.க கைப்பற்றிய இந்தத் தொகுதியை, தன் வெற்றிக்கான ‘சென்டிமென்ட்’ மையமாக விஜய் பார்க்கிறார். தென் மாவட்டங்களுக்கும் மத்திய மாவட்டங்களுக்கும் ஒருசேர செய்தி சொல்லவே இந்தத் திருச்சி தேர்வு என்கிறார்கள் தவெக உடன்பிறப்புகள்.
விஜய் அறிவித்திருக்கும் பட்டியலில் விசுவாசத்திற்கும், சமூக சமன்பாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தி.நகரில் களம் காண்கிறார். இது ‘பாக்ஸ் ஆபீஸ்’ ரிசல்ட்டைப் போல அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தூத்துக்குடியில் தனது நண்பரான நடிகர் ஸ்ரீ நாத்தை விஜய் நிறுத்தி உள்ளார். இதேபோல் விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளர் சபரிநாதன், விஜயின் நீண்டகால நண்பர் ராஜேந்திரனின் மகன் ஆவார்.
கவனம் பெறும் கொங்கு மண்டலம்!
அதிமுக-விலிருந்து பிரிந்து வந்த செங்கோட்டையன், தனது சொந்த ஊரான கோபியிலேயே களம் காண்பது எதிர்பார்த்த ஒன்றுதான். கொங்கு மண்டலத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்க அருண்குமாரையும், முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் கோட்டையில் வி.எஸ். பாபுவையும் நிறுத்தியிருப்பது “நாங்கள் யாரையும் எதிர்க்கத் தயார்” என்கிற விஜய்யின் வெளிப்படையான சவால். குறிப்பாக, வில்லிவாக்கத்தில் களம் காணும் ஆதவ் அர்ஜுனா, ஆர்.கே. நகரில் மரிய வில்சன், எழும்பூரில் ராஜ்மோகன் எனப் பட்டியல் நீள்கிறது.
இதில் கவனிக்க வேண்டியது ‘கொங்கு பெல்ட்’. திருப்பூர், கோவை எனப் பாயும் அந்தப் பட்டியலில் கனிமொழி (கவுண்டம்பாளையம்), சம்பத் குமார் எனப் பலமான பின்னணி கொண்டவர்களை இறக்கியிருக்கிறார். “விஜய் ரசிகர் மன்றம் இப்போது அரசியல் இயந்திரமாக மாறிவிட்டது” என்பதற்கு இந்த வேட்பாளர் தேர்வே சாட்சி.
“வெறுமனே சினிமாவில் டயலாக் பேசினால் போதாது, மக்களிடம் என்ன கொண்டு செல்லப்போகிறீர்கள்?” என்ற விமர்சனங்களுக்கு, விஜய்யின் தேர்தல் அறிக்கை ‘புல்லட்’ வேகத்தில் பதில் சொல்லியிருக்கிறது.
வாக்குறுதிகள் வெறும் கவர்ச்சியா… நிஜமா?
வேலைவாய்ப்பு புரட்சி: 29 வயதைக் கடந்தும் வேலை கிடைக்காத பட்டதாரிகளுக்கு மாதம் ₹4,000 உதவித்தொகை என்பது இளைஞர்களைக் குறிவைத்த ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’.
மண்ணின் மைந்தர் முன்னுரிமை: தனியார் நிறுவனங்களில் 75% தமிழர்களுக்கே வேலை வழங்கினால் ஜிஎஸ்டி சலுகை என்பது, சமீபகாலமாகத் தமிழகத்தில் ஓங்கி ஒலிக்கும் ‘மண்ணின் மைந்தர்’ அரசியலை விஜய் கையில் எடுத்திருப்பதைக் காட்டுகிறது.
கல்விக் கடன்: பிணையமில்லா ₹20 லட்சம் கடன் என்பது நடுத்தர வர்க்கக் கனவுகளுக்குத் தூண்டில் போடும் முயற்சி.
“அதிகாரத்தைப் பரவலாக்குவோம்” எனக்கூறி ஊராட்சிதோறும் ‘முதல்வர் மக்கள் சேவை நண்பர்’ பதவியை உருவாக்கி 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை தருவதாக விஜய் சொல்லியிருப்பது, தவெக-வின் அடிமட்டக் கட்டமைப்பை வலுப்படுத்தும் ஒரு யுக்தியாகவே பார்க்கப்படுகிறது.

க்ளைமேக்ஸ் ட்விஸ்ட்: பறக்கும் படை ரெய்டு!
பட்டியல் வெளியாகி, தொண்டர்கள் உற்சாகத்தில் திளைத்துக் கொண்டிருந்த வேளையில், திடீர் திருப்பமாக விஜய் தங்கியிருந்த தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் இறங்கினர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. “விஜய்யின் எழுச்சியைக் கண்டு ஆளுங்கூட்டணி அஞ்சுகிறது” என ஒரு தரப்பும், “வழக்கமான நடைமுறைதான்” என அதிகாரிகளும் சொல்ல, தமிழக அரசியலின் ‘க்ளைமேக்ஸ்’ இப்போதே தொடங்கிவிட்டது.
விமர்சனப் பார்வை: வெற்றி சாத்தியமா?
“சினிமா பிம்பம் ஓட்டு வங்கியாக மாறுமா?” என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. எம்.ஜி.ஆர் செய்த மாயத்தை விஜய் செய்வாரா அல்லது மற்றவர்களைப் போல ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்குகளுடன் நின்றுவிடுவாரா?
தற்போது வெளியாகியுள்ள இந்தப் பட்டியல் மற்றும் வாக்குறுதிகள், இளைஞர்களைத் துள்ளிக் குதிக்க வைத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், “234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவது சுலபம், அவர்களை வெற்றி பெற வைப்பதுதான் நிஜமான அரசியல் சினிமா” என்கிறார்கள் சீனியர் அரசியல் விமர்சகர்கள்.
ஆனாலும் ஒன்று மட்டும் நிஜம்… இன்று அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல் அறிவாலயத்தையும், பசுமை வழிச் சாலையையும் ஒரு நிமிடம் யோசிக்க வைத்திருக்கிறது.
“நண்பா… வெயிட் பண்ணிப் பார்ப்போம்!” என்று விஜய் பாணியிலேயே இப்போதைக்குச் சொல்ல வேண்டியிருக்கிறது.





