--- --:--:-- --

மதுரையில் ரசிகர்களை மகிழ்விக்க ஐஸ்கிரீம் விற்பனையை தொடங்கிய திரையரங்க உரிமையாளர்!

6

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டாலும் தொழிலாளர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக உணவு பொருட்கள் விற்பனையை தொடங்கியிருக்கிறார் திரையரங்கு உரிமையாளர்.மதுரை மேலூர் பகுதியில் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு மையமாக விளங்குவது கணேஷ் காம்ப்ளக்ஸ்.

 

இங்கு இருக்கும் மூன்று தியேட்டர்களும் இளைஞர்கள் முதியோர் பெண்களின் முதல் விருப்பமாக இருக்கும். அதைப்போல தியேட்டரில் விற்பனை செய்யப்படும் ஐஸ்கிரீம் மற்றும் தேங்காய் பால் பண் ஆகியவற்றுக்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு. நாட்டுப் பசுவின் பாலை பயன்படுத்தி தியேட்டர் நிர்வாகத்தினர் தயாரித்து ரசிகர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

 

பொது முடக்கம் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் அதன் ஊழியர்கள் பாதிக்கப்பட்டதோடு ஐஸ்கிரீம், தேங்காய் பால் பண் கிடைக்காமல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் ஊழியர்களின் பொருளாதாரத்தை கணக்கில் கொண்டு ரசிகர்களுக்காக அதே தியேட்டரில் அதே சுவையுடன் ஐஸ்கிரீம் மற்றும் தேங்காய் பால் பண் விற்பனையை மீண்டும் தொடங்கியுள்ளனர்.

 

தியேட்டர் நிர்வாகத்தினர் 1976ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தியேட்டரில் தொடக்கத்தில் ஒரு ஐஸ்கிரீம் ஒரு ரூபாய்க்கு விற்பனையானது. அண்மையில் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் பொது முடக்க காலத்தில் மக்களின் நலனுக்காக ஐந்து ரூபாய் குறைத்து 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தியேட்டர் உரிமையாளர் தெரிவிக்கிறார்.

 

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தியேட்டர்களில் படம் பார்க்க முடியவில்லை என ஆதங்கத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு கிடைக்கும் ஐஸ்கிரீம் மற்றும் தேங்காய் பால் பண் ஆறுதலாக உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon