தவெக வேட்பாளர் தேர்வில் தொடரும் இழுபறி..!
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம், இன்று நடைபெறவிருந்த நிலையில் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக களம் காணும் தவெக, தனது 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியில் கடந்த சில வாரங்களாகத் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. ஏற்கெனவே முதற்கட்டமாக 60 வேட்பாளர்களும், இரண்டாம் கட்டமாக 50 வேட்பாளர்களும் என மொத்தம் 110 பேர் இறுதி செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 124 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்யும் பணிகளை அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நிறைவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, அனைத்து வேட்பாளர்களையும் இன்று அறிமுகம் செய்து வைக்க விஜய் திட்டமிட்டிருந்தார். ஆனால், தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறும் விதிமுறைகள் மற்றும் சில தொழில்நுட்பக் காரணங்களால், இறுதி நேரத்தில் இந்த நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, நாளை மறுநாள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஹோட்டலில் இந்த அறிமுகக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போகும் வேட்பாளர்கள் அனைவரையும் விஜய் முறைப்படி அறிமுகம் செய்து வைக்க உள்ளார்.
வேட்பாளர் தேர்வில் இழுபறி ஏற்பட காரணமாக அக்கட்சி சார்பில் சொல்லப்படுவது என்றால், இன்னும் சில தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் சிக்கல்கள் இருப்பதாகவும், இன்றைக்குள் அது தீர்க்கப்படும் என்றும், அதேநேரம் அனுமதியும் கிடைக்கவும் வருகிற 29ஆம் தேதி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெறும் என்று தவெகவினர் கூறுகின்றனர்.





