முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கும் பொருநை அருங்காட்சியகம்..!
தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, துலுக்கர்பட்டி ஆகிய தொல்லியல் தளங்களில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையால் அண்மைக் காலத்தில் அறிவியல் அடிப்படையில் அகழாய்வு நடத்தப்பட்டது. இதில் கண்டெடுக்கப்பட்ட அரிய தொல்பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் திருநெல்வேலியில் பொருநை அருங்காட்சியகத்தை அரசு அமைத்துள்ளது.
ரெட்டியார்பட்டி பகுதியில் 13 ஏக்கர் நிலப்பரப்பில் 54,296 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது இந்த அருங்காட்சியகம்.
திருநெல்வேலியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கும் அறிவிப்பை கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். 67 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் இதற்கான கட்டுமானப் பணிகள் கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கி நடைபெற்றன.
தமிழ்நாட்டில் இரும்பின் தொன்மையைப் பறைசாற்றிய சிவகளை, தமிழ்ப் பண்பாட்டின் தொட்டிலாக கருதப்படும் ஆதிச்சநல்லூர், சங்ககால பாண்டியரின் துறைமுகமான கொற்கை ஆகிய இடங்களில் கிடைக்கப்பெற்ற அரிய தொல்பொருட்கள் பொருநை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பழங்கால கட்டடக்கலையைப் பிரதிபலிப்பதோடு நவீன தொழில்நுட்பத்துடன் காண்போரைக் கவரும் வகையில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. கண்கவர் நீர்த்தடாகம், திறந்த வெளி அரங்கம், தொல்லியல் மாதிரிகள் மற்றும் உள்ளூர் கைவினைப் பொருட்களின் விற்பனையகம், பொதுமக்கள் செல்ல எளிதான நடைபாதை, இயற்கையை ரசிக்க ஆங்காங்கே மரங்கள், குறுஞ்செடிகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், இளைப்பாற ஆங்காங்கே இருக்கைகள் இடம்பெற்றுள்ளன.





