--- --:--:-- --

ஒரேயொரு தீர்ப்பு! தீபா தான் டாப்பு!! “ஜெயலலிதாவின் பல கோடி சொத்துகளுக்கு அதிபதி…” சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

ùùèðùù

கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு தரும் என்பது ஜெ. தீபா விஷயத்தில் உண்மையாகி இருக்கிறது. அரசியல் கட்சி தொடங்குவதாக ஆட்டம் காட்டி, சிறிது காலம் காமெடி தர்பாரெல்லாம் நடத்தி, பின்னர் கப்-சிப் என்று அடங்கிவிட்ட ஜெ. தீபா, ஜெயலலிதாவின் சொத்து தொடர்பான ஒரே தீர்ப்பால், பல கோடிகளுக்கு அதிபதியாகி இருக்கிறார்.

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு, ஜெ.தீபா மற்றும் தீபக் ஆகியோர் நேரடி சட்டபூர்வ வாரிசு என்றும், சொத்துக்களை நிர்வகிக்க அவர்களுக்கு உரிமை இருப்பதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அளித்திருக்கிறது. ஒரே தீர்ப்பின் மூலம் ஜெயலலிதா ஈட்டிய சொத்துகள், தீபா மற்றும் தீபக் இருவரிடமும் போய் சேரவுள்ளது.

 

முன்னாள் முதல்வராக இருந்த ஜெயலலிதா, திரைத்துறையில் ஜொலித்து, பின்னர் அரசியலிலும் எம்.ஜி.ஆர் வாரிசாக மிளிர்ந்தார். கடைசி வரை எதிரிகளை எழுந்திருக்க விடாமல் சாதுர்யமாக அரசியல், கம்பீரம் குறையாமல் சிங்கநிகர் தலைவியாகவே மறைந்துபோன அவரை சுற்றிய வாழ்க்கை, ஒரு புதிராகவே இருந்து வந்திருக்கிறது.

திருமணம் செய்து கொள்ளாமல் இருந்துவிட்ட ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் இல்லை. ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார் – விஜயலட்சுமி தம்பதியின் வாரிசுகளான தீபா மற்றும் தீபக் ஆகியோர் தான், அவருக்கு ரத்த உறவுகள் என்றிருந்தனர். கடந்த 1995ம் ஆண்டிலேயே ஜெயகுமார் மறைந்துவிட்டார்; 2013ம் ஆண்டில் விஜயலட்சுமியும் காலமானார்.

 

ஜெயலலிதா, தான் இருந்தவரை, தனது உறவுகள் யாரையும் பெரும்பாலும் நெருக்கமாக வைத்துக் கொண்டதில்லை. மாறாக, நெருங்கிய தோழியாக சசிகலா மட்டுமே இருந்து வந்தார்; சென்னை போயஸ் தோட்ட இல்லத்தின், ஜெயலலிதாவின் கடைசி காலம் வரை சசிகலாவும் வசிந்து வந்தார். முதல்வராக இருந்தபோதே கடந்த 2016 டிசம்பர் மாதம் ஜெயலலிதா காலமானார்.

 

திரைத்துறையிலும், அரசியலிலும் கோலோச்சிய ஜெயலலிதா, பல கோடிகளுக்கு அதிபதியாக திகழ்ந்தார். சென்னை போயஸ் தோட்ட சொத்து, அண்ணாசாலை பார்சன் மேனரில் உள்ள வீடு, செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள சொத்து, ஐதராபாதில் உள்ள வீடு மற்றும் திராட்சை, கோடநாடு எஸ்டேட் என்று சொத்துப்பட்டியல் நீள்கிறது. அதேநேரம் ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் இல்லாததால், அவரது எதிர்பாராத மறைவுக்கு பிறகு, பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் என்னவாகும் என்ற கேள்வி எழுந்தது.

இந்த சூழலில்தான், ஜெயலலிதாவின் 913 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகிக்க, தங்களை நிர்வாகியாக நியமிக்க வேண்டுமென்று கேட்டு, அ.தி.மு.க.வை சேர்ந்த புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அதை நிராகரித்து; மீண்டும் அங்கேயே இருவரும் மேல்முறையீடு செய்தனர்.

 

இந்த வழக்கில், ஜெயலலிதாவின் உறவினர்களான ஜெ.தீபா, தீபக் ஆகியோர் சேர்க்கப்பட்டு, அவர்களும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தனர். மனுவில், ‘ஜெயலலிதா திருமணம் செய்து கொள்ளவில்லை. அவரது சகோதரரின் வாரிசுகள் நாங்கள் தான். வாரிசுரிமை சட்டப்படி, ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க, எங்களுக்கு உரிமை உள்ளது. எங்களை தவிர, நெருங்கிய சொந்தம் யாரும் இல்லை’ என்று கூறப்பட்டிருந்தது. ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகளாக உள்ளதால், சொத்துக்களை நிர்வகிக்க தங்களை அனுமதிக்கவும், மூன்றாம் நபர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் அவர்கள் தரப்பில் முறையிடப்பட்டது.

 

வருமான வரித்துறையும் தன் பங்கிற்கு ஒரு மனுவை தாக்கல் செய்தது. அதில், ‘வருமானவரி மற்றும் செல்வவரி பாக்கியாக, 16.74 கோடி ரூபாயை ஜெயலலிதா செலுத்த வேண்டியுள்ளது. மேலும் வருமானவரி பாக்கி 40 கோடி ரூபாய் உள்ளதாக கூறப்பட்டது. வழக்கின் வாத பிரதிவாதங்கள் அனைத்தும் முடிந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி நீதிபதி கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் அமர்வு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.

அரசியல் வட்டாரத்தில் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு, மே 27ம் தேதி வெளியானது. தீர்ப்பில் நீதிபதிகள் கூறுகையில், மனுதாரர்கள் இருவரும், அ.தி.மு.க.வினர் என்பதற்கு, எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை. அவர்கள் அந்தக் கட்சி தொண்டர்களாக இருந்தாலும் கூட, சொத்துக்களை நிர்வகிக்க அனுமதி கோரும் உரிமை வந்து விடாது. எனவே, மனுதாரர்களுக்கு வழக்கு தொடர தகுதி இல்லை; சொத்துக்களை நிர்வகிக்க, நியமனம் செய்யக்கோரவும் உரிமை இல்லை. எனவே, மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்படுவதாக தெரிவித்தனர்.

 

தீர்ப்பின் அடுத்த அம்சம் தான், முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது, ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க இரண்டாம் நிலை வாரிசுதாரர்களான தீபக் மற்றும் தீபா உள்ளனர். அவர்களுக்கு சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமை உள்ளது என்ற பரபரப்பான தீர்ப்பை நீதிபதிகள் வெளியிட்டனர்.

 

அத்துடன் அரசுக்கு சில அறிவுரைகளையும் நீதிமன்றம் வழங்கியது. இது குறித்து நீதிபதிகள் கூறுகையில், ஜெயலலிதா இல்லம், 10 கிரவுண்ட் நிலத்தில் அமைந்துள்ளது. அந்த இல்லத்தை, நினைவிடமாக மாற்ற, அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.அதிகப்படியான இழப்பீட்டு தொகையை அளித்து, அந்த சொத்தை கையகப்படுத்துவதற்கு பதில், உள்கட்டமைப்பு வசதிகளுக்கு, வளர்ச்சி திட்டங்களுக்கு அதற்கான நிதியை பயன்படுத்தலாம்.

 

அத்தியாவசிய பணிகள் பல உள்ள நிலையில், நினைவிடங்கள் கட்டுவதற்காக, பொது மக்கள் பணத்தை வீணடிக்கக்கூடாது. மறைந்த முதல்வர்களின் இல்லங்களை எல்லாம் நினைவிடமாக்க அரசுவிரும்பினால், இதற்கு முடிவு என்பதே இல்லாமல் போய் விடும் என்று ஒரு ‘குட்டு’ வைத்தனர்.

 

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம், முதல்வரின் இல்லம் மற்றும் அலுவலகமாகவே, 15 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டது. முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகமாக பயன்படுத்த, அங்கு அனைத்து வசதிகளும் இருக்கும். எனவே, நினைவிடமாக மாற்றுவதற்கு பதில், முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகமாக மாற்ற, அரசு பரிசீலிக்கலாம் என்றனர். தீபா மற்றும் தீபக் ஆகியோருக்கு, அவர்களது சொந்த செலவில், 24 மணி நேர பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடியான தீர்ப்பு, அரசியல் வட்டாரங்களில், குறிப்பாக அதிமுக தரப்பில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. ஏனென்றால், இந்த தீர்ப்பின் மூலம், ஜெயலலிதாவின் பல கோடி சொத்துக்களுக்கு அதிபதியாகும் வாய்ப்பு ஜெ. தீபா மற்றும் தீபக்கிற்கு கிட்டியுள்ளது. இந்த தீர்ப்பே இறுதியானது என்று கூறிவிட முடியாது என்றாலும், முதல் ரவுண்டிலேயே ஜெ. தீபா எளிதாக வெற்றி பெற்றுவிட்டது, அதிமுகவுக்கு நெறுடலை ஏற்படுத்தி இருக்கிறது.

 

எனவே, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு இருக்கும் என்று தெரிகிறது. சசிகலா தரப்பிலும் தீர்ப்பு ஏமாற்றத்தை தந்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே, ஜெயலலிதாவின் சொத்து தொடர்பான பிரச்சனையில், இனிமேல் தான் சூடுபறக்கும்; எனவே, அடுத்து வரும் நாட்களில் தரமான சம்பவங்களை இனி எதிர்பார்க்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

 

தீபா – சசிகலா மல்லுக்கட்டு

 

ஜெயலலிதாவின் பூர்விக சொத்தில் தீபா, தீபக் ஆகியோர் உரிமை கொண்டாடினாலும், ஜெயலலிதா சுயமாக சம்பாதித்த சொத்துகள் யாருக்கு போய்ச் சேரும் என்பது குறித்து எந்த உயிலும் எழுதி வைக்கப்படவில்லை. எனவே, சொத்து தொடர்பான இனிமேல் தான் பிரச்சனை, வழக்குகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சட்ட வல்லுனர்கள் கூறினர்.

 

கொடநாடு எஸ்டேட் முழுவதும் தமக்கு சொந்தம் என்று ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொந்தம் கொண்டாடும் சூழலில், தீபாவால் முழுச் சொத்துக்கும் உரிமை கொண்டாடுவது என்பது எந்தளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டால், சொத்து வழக்கு நீண்டு கொண்டே செல்லும். மாறாக, இருவரும் சமரசம் செய்து கொள்ளும்பட்சத்தில் சுமூகமாக வழக்கு முடிவுக்கு வரலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

 

எனவே, ஜெயலலிதாவின் சொத்து தொடர்பான வழக்கில் சசிகலாவின் மூவ்மெண்ட் என்ன என்பதை அறிய பலரும் ஆவலாக உள்ளனர்.

 

”ஜெ. வீட்டில் குடியேறுவேன்”

தனது அத்தையின் (ஜெயலலிதா) சொத்துக்களுக்கு நேரடி வாரிசு என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பால் பூரிந்த்து போயியுள்ள தீபா, சட்ட சிக்கல்களை தீர்த்து ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் குடியேற திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

 

இது குறித்து அவர் கூறும்போது, ”நீதி வென்றுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் நாங்கள்தான் உண்மையான வாரிசு என்று உறுதியாகி உள்ளது. சட்ட நிபுணர்களுடன் ஆலோசன நடத்துவோம். சட்ட சிக்கல்களை களைந்து, ஜெயலலிதா வசித்த வீட்டில் நாங்கள் குடியேறுவோம். ஜெயலலிதாவின் பல கோடி ரூபாய் சொத்தை, சட்ட விரோதமாக யார் பயன்படுத்தினாலும் அதை தடுப்போம்.

 

ஜெயலலிதாவின் பெயரில் அறக்கட்டளை அமைத்து, சேவை செய்வோம். ஜெயலலிதாவின் இல்லத்தை முதல்வரின் அலுவலகமாக மாற்றுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இதை எதிர்ப்போம்” என்றார்.

Leave a Reply

Right Menu Icon