பத்தாம் வகுப்பு தேர்வு வழக்கு ஜூன் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ஜூன் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தேர்வை ஜூன் மாதம் 15ஆம் தேதி தொடங்க அனுமதிக்க முடியாது எனக் கூறிய நீதிபதிகள் பிற்பகலில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. பிற்பகலில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது வரும் நாள்களில் கொரோனா அதிகரிக்க வாய்ப்புள்ள நிலையில் இதுவே தேர்வு நடத்த சரியான நேரம் என்றும் நிபுணர்களின் கருத்துப்படி இரண்டு லட்சம் மக்கள் தமிழகத்தில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது .
மேலும் பத்தாம் வகுப்பு தேர்வு நடத்துவதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளதால் தேர்வை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு வாதிட்டது. இதனையடுத்து தேர்வு எழுதும்போது கொரொனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இறந்தால் யார் பொறுப்பு ஏற்பார்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதனையடுத்து வழக்கை வரும் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள் கூடுதல் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். பத்தாம் வகுப்பு தேர்வு தொடர்பான பிற வழக்குகளோடு சேர்த்து இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.






