குறைக்கப்பட்ட கேபிள் டிவி கட்டணம் 15 ஆம் தேதிக்குள் புதிய தொகுப்பு மாற்ற வேண்டும்
குறைக்கப்பட்ட அரசு கேபிள் தொலைக்காட்சி கட்டணம் வரும் 15-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. அரசு கேபிளின் புதிய தொகுப்புக்கு வரும் வியாழக்கிழமைக்குள் மாற வேண்டுமெனவும் ஆபரேட்டர்களை தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.தமிழகத்தில் பல்வேறு கட்டணங்களில் பல தொகுப்புகளாக அரசு கேபிள் தொலைக்காட்சி சேவைகள் அளிக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், அரசு கேபிள் தொலைக்காட்சிக் கட்டணத்தை முறைப்படுத்தி முதல்வர் பழனிசாமி அண்மையில் அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பின்படி, மாதாந்திர கேபிள் தொலைக்காட்சி கட்டணத்துடன், சரக்கு சேவைகள் வரியும் சேர்த்து ரூ.153.40 என வசூலிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், அரசு கேபிள் தொலைக்காட்சி சேவையின் புதிய தொகுப்புக்குள் ஆபரேட்டர்கள் அனைவரும் வரும் 15-ஆம் தேதிக்குள் மாற வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கான சுற்றறிக்கையை அனைத்து ஆபரேட்டர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-புதிய தொகுப்புக்கான மாத சந்தா கட்டணமாக ரூ.153.40 வசூலிக்கப்பட உள்ளது. அதில், ஆபரேட்டர்கள் பங்காக ரூ.82.60 வழங்கப்படும். மேலும் ஆகஸ்ட் மாதத்துக்கான கேட்புத் தொகையானது வரும் 15-ஆம் தேதி இரவு மென்பொருளில் பதிவேற்றம் செய்யப்படும். எனவே, உள்ளூர் கேபிள் தொலைக்காட்சி ஆபரேட்டர்கள் அனைவரும் வரும் 15-ஆம் தேதி மாலை 6 மணிக்குள்ளாக புதிய தொகுப்புக்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.
ஆபரேட்டர்கள் தங்களது தொகுப்பினை மாற்றிக் கொள்வதற்கு வசதியாக மண்டல வாரியாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.காலை 7 மணி முதல் 11 மணி வரை அரியலூர், கோவை, கரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், சிவகங்கை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், காலை 11 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை கடலூர், ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருச்சி ஆகிய மாவட்டத்தினரும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 6 மணி வரை திண்டுக்கல், காஞ்சிபுரம், திருநெல்வேலி, திருவள்ளூர், தூத்துக்குடி, திண்டுக்கல், விழுப்புரம் ஆகிய மாவட்ட ஆபரேட்டர்களும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணிக்குள் சென்னை, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், வேலூர், புதுக்கோட்டை, சேலம், தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டத்தினரும் புதிய தொகுப்புக்குள் மாறிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு கேபிள் தொலைக்காட்சியில் வழங்கப்படாமல் உள்ள 30 லட்சத்துக்கும் அதிகமான செட்-டாப் பாக்ஸ்களை விநியோகிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கேபிள் தொலைக்காட்சிக்கான மாதாந்திர கட்டணத்தைக் குறைத்ததன் மூலமாக, மேலும் பலர் தனியார் நிறுவனத்தில் இருந்து மாறி அரசு கேபிளுக்கு வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கையிருப்பில் உள்ள செட்-டாப் பாக்ஸ்கள் விரைவில் விநியோகம் செய்யப்படும் என அரசு கேபிள் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




