--- --:--:-- --

திருப்பரங்குன்றம் மலை தர்கா முகப்பு கல்வெட்டில் ‘1805’ வருடம் பொறிப்பு!

5

துரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் தற்போது வெளியாகியுள்ள ஒரு புகைப்பட ஆதாரம் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. மலை உச்சியில் தீபத்தூண் அமைந்துள்ள பகுதி சிக்கந்தர் பாதுஷா தர்காவுக்குச் சொந்தமானது என்று தர்கா நிர்வாகத் தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இதன் காரணமாகவே அங்கு தீபம் ஏற்றுவதற்குத் தடை கோரப்பட்டு வருகிறது.

 

தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விளக்கத்தில், அந்தத் தூண் ஒரு நில அளவைக் கல் (Survey Pillar) என்றும், அது பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய சமணர் காலத்துத் தூண் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இந்நிலையில், சிக்கந்தர் பாதுஷா தர்காவின் முகப்பில் “1805” என்ற ஆண்டு பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றின் புகைப்படம் இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. தீபத்தூண் தங்களுக்குச் சொந்தம் என தர்கா நிர்வாகம் உரிமை கோரும் நிலையில், தர்காவின் முகப்பு கட்டடமே 19-ம் நூற்றாண்டில் (1805-ல்) தான் கட்டப்பட்டிருக்கலாம் என்பதை இந்த ஆதாரம் சுட்டிக்காட்டுவதாக சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது.

 

 

இதுகுறித்து மத்திய தொல்லியல் துறையின் திருச்சி மண்டல கண்காணிப்பு அலுவலகம் தெரிவித்துள்ளதாவது, இணையத்தில் பரவும் தர்கா முகப்பு கல்வெட்டில் 1805 என்ற ஆண்டு உள்ளது. இதன் மூலம் தர்காவின் முகப்பு கட்டடம் அந்த ஆண்டில்தான் உருவானதாகக் கருத வாய்ப்பு உள்ளது. ஆனால், தீபத்தூண் என்பது பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய சமணர் காலத்தைச் சார்ந்தது எனக் கூறப்படுகிறது.

 

அவ்வாறு இருக்கும்போது, அந்தத் தூண் தங்களுக்குச் சொந்தமானது என தர்கா நிர்வாகம் கூறுவது கேள்வியை எழுப்புகிறது. அந்தப் புகைப்படம் மற்றும் அதில் உள்ள தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இந்த ஆதாரங்கள் நீதிமன்ற விசாரணையில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Right Menu Icon