மயானத்தில் 6 குழந்தைகளுடன் தங்கியிருந்த பெண்!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கொரொனா அச்சுறுத்தலுக்கு இடையே எந்த பாதுகாப்பும் இல்லாமல் குழந்தைகளுடன் பெண் ஒருவர் மயானத்தில் தங்கியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரமிளா. அவருடைய கணவர் பெங்களூரில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். 6 குழந்தைகளுடன் உறவினர் வீட்டில் தங்கி இருந்தார் பிரமிளா.
குடும்ப பிரச்சனையில் அவர்கள் பிரமிளாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டார்கள். தங்க இடமில்லாமல் ஊரடங்கால் கணவரும் சொந்த ஊர் திரும்ப முடியாத நிலையில் 6 குழந்தைகளோடு மயானத்தில் உள்ள கட்டிடத்தில் பிரமிளா தங்கியுள்ளார்.
ஆதார் அட்டை, குடும்ப அட்டை இல்லாததால் அரசும் எந்த உதவியையும் தர முடியாமல் தவிக்கும் காவல்துறையினர் மற்றும் செஞ்சி எம்எல்ஏ சார்பில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. தங்குவதற்கு நிரந்தர இடம் ஏற்பாடு செய்து தரவேண்டும் என பிரமிளா கோரிக்கை விடுத்துள்ளார்.







