பைக்கில் லிப்ட் தருவதாகக் கூறி, சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும் என்று கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன. என்கவுண்டருக்கு பிறகும்கூட இத்தகைய குற்றங்களை அச்சமின்றி அரங்கேற்றப்படுவது தான் இதற்கு காரணம்.
பைக்கில் லிப்ட் தருவதாக கூறி சிறுமியை அழைத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் இருவர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதியை அடுத்த திருச்சானூர் பகுதியில் தான் இந்த கொடுமை அரங்கேறியுள்ளது.
அந்த பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறி திருச்சானூர் பகுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் அந்த வழியாக சென்றுள்ளார்.
சிறுமியை பார்த்ததும் லிப்ட் தருவதாக கூறி பைக்கில் ஏற்றிக்கொண்டு உள்ளார்.முள்ளபொடி என்ற பகுதிக்கு வந்ததும் பைக்கை நிறுத்திய வெங்கடேஷ் பெட்ரோல் தீர்ந்து விட்டதால் வாங்கி தருவதாக கூறி சிறுமியை அங்கேயே நிற்க வைத்து விட்டு சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில் தனது நண்பர் ராஜமோகன் நாயக் என்பவருடன் அங்கு வந்த வெங்கடேஷ் சிறுமியை ஒதுக்குப்புறமான இடத்துக்கு அழைத்து சென்று மிரட்டி இருவரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து வீட்டிற்கு வந்து பெற்றோரிடம் கூறியுள்ளார் சிறுமி.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் போலீசார் புகாரை அலட்சியம் செய்து வந்த நிலையில் நீண்ட இழுபறிக்குப் பின்னர் குற்றவாளிகள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
விசாரணையில் ராஜ்மோகன் நாயக் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.





