தொழிலதிபரின் பேரனை கடத்தி 6 கோடி கேட்ட கும்பல்..!
தொழிலதிபர் ஒருவரின் பேரன் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமா பாணியில் நடைபெற்ற இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கடத்தல் சம்பவம் நடந்தது இரவு நேரத்தில் அல்ல மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் மாலை நேரத்தில் தான்.
திருச்சி கண்டோன்மெண்ட் வார்னர் சாலையில் உள்ள வீட்டின் வாசலில் சைக்கிளை ஓட்டிக் கொண்டிருந்த 12 வயது சிறுவன் திடீரென கடத்தப்பட்டது அந்த பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. கடத்தப்பட்ட சிறுவன் திருச்சியை சேர்ந்த முக்கிய தொழில் அதிபரின் பேரன்.
அவர் டூவீலர் ஷோரூம் மொத்த மருந்து கொள்முதல் செல்போன் ஏஜென்சி என பல தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். தொழில் அதிபரின் பேரன் சைக்கிள் ஓட்டி விளையாடிக்கொண்டிருந்த போது கார் ஒன்று அங்கு வந்துள்ளது. கடத்தல்காரர்கள் காரை நிறுத்தி நிதானமாக சிறுவனை கடத்தி திட்டத்தை செயல்படுத்தினார்.
அந்த காட்சிகள் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வீடியோவை பார்க்கும்போது கடத்தல் நன்றாக திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது என்றே தெரிகிறது. சிறுவனின் பெற்றோர் , உறவினர்கள் மத்தியில் பதற்றம் தொற்றிக் கொண்டதை அடுத்து சில மணி நேரங்களில் கடத்தல்காரர்கள் தொடர்பில் வந்துள்ளனர்.
சிறுவனின் பெற்றோரை தொடர்புகொண்ட கடத்தல்காரர்கள் 6 கோடி ரூபாய் தந்தால் உங்கள் மகனை உயிரோடு விடுவோம் இல்லையென்றால் கொன்று விடுவோம் என்று சினிமா பாணியில் மிரட்டியுள்ளனர். மிரண்டுபோன சிறுவனின் பெற்றோர் அவ்வளவு தொகை தங்களால் தர முடியாது என்று கூறியுள்ளனர்.
அதற்கு உங்களின் மகனின் கை தான் கிடைக்கும் என போனிலேயே மிரட்டல் விடுத்துள்ளனர் கடத்தல்காரர்கள். பயந்துபோன சிறுவனின் பெற்றோர் உடனடியாக கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். துரிதமாக செயல்பட்ட காவல்துறையினர் சிறுவன் கடத்தப்பட்ட வாகனத்திலிருந்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சிசிடிவி கேமரா மூலம் கார் பயணித்ததை கண்டறிந்தனர். அந்த வாகனம் சாலையில் சென்று கொண்டிருப்பதை அறிந்த காவல்துறையினர் காரை பின்தொடர்ந்து வளைத்துப் பிடித்துள்ளனர். காவல்துறையினர் பின்தொடர்வதை கண்ட கடத்தல்காரர்கள் ராமலிங்க நகர் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதனையடுத்து சிறுவனை பத்திரமாக மீட்டு காவல்துறையினர் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். கைப்பற்றி விசாரணை நடத்தியதில் போலி பதிவெண் கொண்ட காரின் மூலம் சிறுவனை கடத்தியது தெரியவந்தது. இது தொடர்பாக முன்பு மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மூவரை தேடி வருகின்றனர். திருச்சியில் மிக முக்கிய தொழில் அதிபரின் பேரன் கடத்தப்பட்டதால் தொழில் போட்டியா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.






