பார்வை திறன் இல்லாத பெண்ணுக்கு சீர்வரிசை அளித்து உதவிய கால்பந்தாட்ட குழுவினர்..!
சென்னை அருகே பார்வை திறன் இல்லாத பெண்ணின் திருமணத்திற்கு உள்ளூர் கால்பந்தாட்ட குழுவினர் தங்களின் சொந்த செலவில் சீர்வரிசை கொடுத்து ஆனந்த அதிர்ச்சி கொடுத்துள்ளனர். குன்றத்தூரை சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி மகேஸ்வரிக்கு உள்ளூர் கால்பந்தாட்ட குழுவினர் சிறு சிறு உதவிகளை செய்து வந்தனர்.
மகேஸ்வரிக்கு திங்கட்கிழமை அன்று திருவள்ளூரில் திருமணம் நடைபெற்றது. ஏழ்மையின் காரணமாக சீர்வரிசை தர இயலாது என்று மணமகன் வீட்டில் மகேஸ்வரியின் தாய் கூறியிருந்தார் .
ஆனால் திருமணத்தை அறிந்த கால்பந்தாட்ட குழு தலைவர் ஹரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் மகேஸ்வரியை தங்கள் வீட்டுப் பெண்ணாக கருதி சீர்வரிசை கொண்டு வந்து இறக்கி புது மணப்பெண்ணுக்கு ஆனந்த அதிர்ச்சி கொடுத்தனர்.
கட்டில், பீரோ, வாஷிங் மெஷின் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்கள், சேலைகள் என்று இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை சீர்வரிசையாக அளித்தனர். தன் மீதான அன்பை மனக் கண்களால் பார்த்து மகிழ்ந்து போனார் புதுமணப்பெண் மகேஸ்வரி.






