மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் நாளை முதல்கட்ட தேர்தல்..!
மேற்கு வங்கத்தில் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அசாம் மாநிலத்தில் 47 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நாளை முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மேற்கு வங்க மாநிலத்தின் 5 மாவட்டங்களில் உள்ள 30 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
கொரொனா கட்டுப்பாட்டு நடவடிக்கையாக கடந்த முறையை விட தற்போது மாநிலம் முழுவதும் கூடுதலாக 37 சதவீதம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முதற்கட்ட தேர்தலுக்காக 10 ஆயிரத்து 288 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன ஒவ்வொரு மையங்களிலும் ஆயிரம் பேர் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட உள்ளது. 30 தொகுதிகளில் 197 பேர் களத்தில் உள்ளனர். முதல் கட்ட தேர்தல் நடக்க 30 தொகுதிகளில் 27 தொகுதிகள் தற்போது திரிணாமுல் காங்கிரஸ் வசம் உள்ளது.
முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 5 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் ஒரு காலத்தில் நக்சல் பாதிப்பு பகுதிகளாக இருந்ததால் பதட்டமான பகுதிகளில் கூடுதல் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.






