இந்திய எல்லையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் இறுதி அஞ்சலி நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானை அருகே உள்ள கடுக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்திய எல்லையான லடாக் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது சீன ராணுவ தாக்குதலில் வீரமரணம் அடைந்தார். இவரது உடல் டில்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு அங்கிருந்து மதுரை வந்து தரை மார்க்கமாக திருவாடானை வழியாக தொண்டியை வந்தடைந்தது.
வழியில் திருவாடானையில் நள்ளிரவிலும் இளைஞர்கள் வீரர் உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதனைத்தொடர்ந்து தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் ராணுவ வாகனத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கே அவரது உடலை கண்ட அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்கும் விதமாக இருந்தது. தொடர்ந்து உறவினர்கள் அஞ்சலி செலுத்த பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தமிழக அரசு வழங்கிய ரூபாய் 20 லட்சத்திற்கான காசோலையை குடும்பத்தாரிடம் வழங்கினார். இன்று காலை அவரது வீட்டின் முன்பு இறுதிச்சடங்குகள் ராணுவ மரியாதையுடன் தேசியக்கொடி போர்த்தி மரியாதை செலுத்தி தேசியக்கொடியை அவரது மனைவியிடம் வழங்கினார்கள். முப்படை தளபதிகள், மாவட்ட ஆட்சியர், வீரராகவராவ், கண்காணிப்பாளர் வருன்குமார் மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள் அதனைத் தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் ஏராளமான அரசியல் கட்சி பிரமுகர்களும் பொதுமக்களும், திருவாடானை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கருணாஸ் தனது சொந்த நிதியிலிருந்து ஒரு லட்சத்தை ரொக்கமாக வாங்கினால் அதற்கு முன்னதாக திமுக சார்பில் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் கட்சி நிதியில் இருந்து 2 லட்சத்துக்கு தொகையை வழங்கினார். பி.ஜேபி மாநில தலைவர் முருகன் மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளை சிறப்பாக செய்திருந்தனர்.

ராணுவ வீரரின் அடக்கம் செய்ததை தொடர்ந்து அந்த கிராமமே சோகத்தில் ஆழ்ந்ததுபழனியின் தகப்பனார் காளிமுத்து கூறுகையில் எனது மகனின் மரணம் நாட்டுக்காக ஏற்பட்டதைத் தொடர்ந்து பெருமை கொள்வதாகவும் எனது மற்றொரு மகனும் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார் என்றும் எனது மகனின் சேவையை பாராட்டும் வகையில் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.







