தன்னைக் கொல்ல வந்த சிறுத்தையுடன் சண்டையிட்டு தப்பித்த நாய்..!
குஜராத் மாநிலத்தில் தன்னை பிடித்த சிறுத்தையை நாயொன்று வீரத்துடன் எதிர்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள குணா என்ற இடத்தில் இரவு நேரத்தில் பூட்டப்பட்டிருந்த வீட்டிற்குள் நாய் ஒன்று காவல் இருந்தது. அப்போது சத்தமின்றி வந்த சிறுத்தை ஒன்று திடீரென சுற்றுச்சுவரில் ஏறி குதித்து வீட்டுக்குள் புகுந்தது.
இதனை கண்ட நாய் அதனை கண்டு குரைக்கவே அடுத்த நொடி சிறுத்தை நாயின் குரல் வளையை நெரித்தது. ஆனாலும் அசராத நாய் தனது போராட்டத்தை விடாமலும் தான் உச்சகட்ட கோபத்தில் இருப்பதாக காட்டிக்கொள்ள வாலை ஆட்டியபடியும் இருந்தது. இதனை கண்ட சிறுத்தை நாயை விட்டுவிட்டு மீண்டும் வந்த வழியே திரும்பி சென்றது. இதுதொடர்பான வீடியோ அந்த வீட்டில் மாட்டப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
மதுரையில் தனது எஜமானர் குடும்பத்தை பாதுகாக்க நாய் ஒன்று பாம்புடன் சண்டையிட்ட நிகழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.. மதுரையை சேர்ந்த மகேஸ்வரன் என்பவர் தனது வீட்டில் நாய் ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு அவரது வீட்டின் முற்றத்தில் கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று வந்துள்ளது.
பாம்பைக் கண்டதும் தொடர்ந்து குரைத்துக் கொண்டிருந்த நாய் ஒரு கட்டத்தில் கோபமடைந்து பாம்பை கடித்து குதறி உள்ளது. இதில் பாம்பு உயிரிழந்த நிலையில் பாம்பு கடித்ததில் நாயும் சுயநினைவை இழந்ததால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.







