தேர்தல் பரப்புரையை இன்று தொடங்கும் திமுக..!
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற தேர்தல் பரப்புரையை திமுக இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் களம் அனல் பறக்க தயாராகிவரும் சூழலில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என அரசியல் கட்சிகள் மும்முரமாக பணியாற்றி வருகின்றன.
அந்த வகையில், இளைஞர் அணி மாநாடு, மகளிர் அணி மாநாடு என அடுத்தடுத்த மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் மூலம் களத்தில் பணியாற்றும் நிர்வாகிகளை தயார் செய்துவந்த திமுக, தற்போது ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற பெயரில் இன்று களத்தில் நேரடியாக தனது தேர்தல் பரப்புரையை தொடங்குகிறது.
அதன்படி, திமுக தலைவர் ஸ்டாலினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 22 நட்சத்திர பேச்சாளர்கள் 234 தொகுதிகளிலும் இம்மாதம் முழுவதும் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்கள். ஒவ்வொரு தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள், இளைஞர்கள், மாணவர்கள், தொழில் முனைவோர், கல்வியாளர்கள் உள்ளிட்டோரை ஒரே இடத்தில் அழைத்து, மண்டல பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறவும், கலந்து கொள்வோரின் கோரிக்கைகளை அறிந்து அவர்களுடன் கலந்துரையாடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மறுபுறம், திமுக மகளிர் அணியினரும் களமிறங்குகின்றனர். திமுக மகளிர் அணி சார்பில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தலா ஒரு பொறுப்பாளர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். அப்பொறுப்பாளர்களுடன் திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
அப்போது, திமுக அரசின் சாதனைகளை வீடு வீடாகச் சென்று எடுத்துக் கூறி பரப்புரை மேற்கொள்வது குறித்து அறிவுரைகளை வழங்கினார். தமிழ்நாட்டில் தற்போது நான்கு முனை போட்டி நிலவும் சூழலில், ஆளும் திமுக அரியணையை தக்கவைக்கும் முயற்சியை வலுப்படுத்தும் விதமாக நேரடியாக மக்களைச் சந்திக்க களம் இறங்கியுள்ளது…






