அரசு பேருந்தில் இருந்து தடுமாறி கீழே விழுந்த நடத்துனர்..! அதை அறியாமல் 5 கி.மீ சென்ற ஓட்டுனர்..!
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தில் ஒரு சிலர் மட்டுமே பயணித்தனர். பேருந்து ஆரல்வாய்மொழி வந்ததும் அங்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சிறிது தூரம் சென்ற போது பேருந்தில் நடத்துனர் இல்லை என பயணிகள் தெரிவித்தனர்.
அதன் பின்புதான் நடத்துனர் பேருந்தில் இல்லாதது ஓட்டுநருக்கு தெரியவந்தது. இதையடுத்து பயணிகளை இறக்கிவிட்டு வந்த வழியே பேருந்தை திரும்பிச் சென்ற ஓட்டுநர் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள முப்பந்தல் அருகே சென்றபோது அங்கு தான் நடத்துனர் மகாலிங்கம் தவறிக் கீழே விழுந்து இருப்பது தெரியவந்தது.
முன்னதாக அந்த வழியாக சென்ற போது பேருந்தில் படிக்கட்டில் நின்று இருந்த நடத்துனர் மகாலிங்கம் நிலைதடுமாறி கீழே உருண்டு விழுந்தது தெரியவந்தது. இதனை கவனிக்க தவறிய ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் சென்றுள்ளார்.
இதனிடையே கீழே விழுந்து காயமடைந்த நடத்துனரை அந்த பகுதி பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததும் ஓட்டுநருக்கு தெரியவந்தது. இதையடுத்து அந்த பேருந்து ஓட்டுநர் டெம்போ கொண்டு சென்று விட்டு விட்டு நடத்துனரை நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு விரைந்து சென்றார்.
நடத்துனர் கீழே விழுந்ததும் தெரியாமல் ஐந்து கிலோ மீட்டர் தூரம் அரசு பேருந்தை ஓட்டிச் சென்றது தொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






