--- --:--:-- --

மாதவிடாய் காரணமாக ஊருக்கு வெளியே ஒதுக்கப்படும் பெண்களின் அவநிலை!

2.1

அனைத்து துறைகளிலும் தடைகளைத் தாண்டி தடம் பதித்து வருகின்றனர் பெண்கள். ஆனால் இந்த 21ஆம் நூற்றாண்டிலும் ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு நாட்களில் ஊருக்கு ஒதுக்குப்புறமான கட்டிடத்தில் பெண்களை தங்க வைக்கும் முறையை பின்பற்றுகிறது ஒரு கிராமம். மதுரையில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கூவலப்புரம் கிராமம்.

 

இந்த ஊருக்கு வெளியே 15 அடி நீளம், 10 அடி அகலம் கொண்ட அறை ஒன்று 5 அடி அகலம், 5 அடி நீளம் கொண்ட மற்றொரு அறை ஒன்று உள்ளது. இந்த இரு அறைகளிலும் தான் மாதவிலக்கான பெண்கள் இருக்கவேண்டுமென ஊர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தெய்வ வாக்கு என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த முறையை பின்பற்றுகிறார்கள் ஊர் மக்கள்.

 

முட்டுதுறை என்று அழைக்கப்படும் இந்த இடத்தில்தான் கல்லூரி பெண்கள், வேலை பார்க்கும் பெண்கள் என அனைத்து தரப்பு பெண்களும் தங்கள் மாதவிடாய் நாட்களில் தங்க வேண்டும். வீட்டிற்கு வெளியே உள்ள மரத்தில் தொங்க விடப்பட்டுள்ள துணிப்பைகளில் உள்ளே இருக்கும் பெண்களுக்கு தேவையான தட்டு, டம்ளர், சாப்பாடு உள்ளிட்டவை வைக்கப்படும்.

இவற்றை குறிப்பிட்ட நாட்களுக்காக மட்டுமே இவர்கள் பயன்படுத்துகிறார்கள். பல தலைமுறைகளாக இந்த நடைமுறையை பின்பற்றுவதால் இந்த கிராமத்தினர் இதனை மிக இயல்பான ஒன்றாக ஏற்றுக் கொண்டுள்ளனர். மாதவிலக்கு மட்டுமின்றி பேர் காலத்திலும் முதல் 30 நாட்களுக்கு பெண்கள் இந்த அறைகளில் தங்க வேண்டும் என்ற நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது.

 

மாதவிலக்கு நாட்களில் பெண்கள் வீட்டிற்குள் நுழைய கூடாது என்ற கட்டுப்பாடு வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கும் பொருந்துமாம். அதோடு அந்தக் கட்டடத்தில் இருக்கும் பெண்களைத் தொடுபவர்களையும் குளிக்காமல் வீட்டிற்குள் இவர்கள் அனுமதிப்பதில்லை. இருபத்தி ஓராம் நூற்றாண்டில் இருக்கிறோம், மாதவிலக்கு என்பது இயற்கையான ஒன்று என்ற விஷயங்களை கடந்து நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு கிராமமே பெண்களை ஊரை விட்டு விலக்கி வைக்கிறது என்பது இன்றும் தொடர்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon