காதலி மர்ம மரணம்! ஆணவக்கொலை எனக்கூறி காதலியின் இறப்புக்கு நியாயம் கேட்கும் காதலன்!
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்திற்கு அருகே காதலனை பிரிந்த துயரத்தில் கல்லூரி மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காதலியின் இறப்புக்கு நியாயம் கேட்டு கண்ணீர் மல்க நின்று இருக்கும் இளைஞர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த விவேக்.
இவரும் அதே மாவட்டத்தை சேர்ந்த பெண்ணும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதனால் கடந்த வாரம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் குளித்தலை அருகே வாகன தணிக்கையில் இருந்த காவலர்கள் இவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து காவல்துறையினர் இரு வீட்டாரையும் வரவழைத்து விவேக்கிற்கு 21 வயது பூர்த்தி அடையாததால் பெண்ணை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் வீடு திரும்பிய தனது காதலி பத்தாம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்ததாகவும் உடனடியாக அவரின் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டதாகவும் வேதனையுடன் கூறுகிறார் விவேக்.
வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்ததால் காதலி ஆணவ படுகொலை செய்யப்பட்டாரா எனது காதலியின் மரணத்திற்கு நியாயம் வேண்டும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அவருடன் பெற்றோரும், மாதர் சங்கத்தினரும் சென்றிருந்தனர். பெண்ணின் மரணம் குறித்த உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என மாதர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் பெண்ணின் தாயார் பெரியம்மா, மாமா உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து இருக்கும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.







