தவெக தொண்டர்கள் கைது..!
சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் தவெக தொண்டர்கள் கைது செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், தமிழ்நாடு முழுவதும் தவெக தொண்டர்கள் தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாமலும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியும் வரும் நிலையில், அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகிறது.
பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, உலக மகளிர் தினமான இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கழக மகளிர் அணியினர் மற்றும் தோழர்கள் அறவழியில் அடையாளப் போராட்டத்தை நடத்தினர்.தங்களுக்கான உரிமை கிடைக்காத பட்சத்தில் அதை வலியுறுத்திக் கேட்டுப் பெற வேண்டிய நிலையில் தமிழ்நாட்டுப் பெண்கள் இருப்பதால்தான் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இந்த அறவழி அடையாளப் போராட்டமானது நடைபெற்றது.
ஆனால் தமிழக மக்கள் தங்களின் தேவைகளுக்காகக் கூட போராட்டத்தை நடத்தக் கூடாது என்ற அராஜகப் போக்குடன் தமிழக அரசு, கழக மகளிர் மற்றும் தோழர்களைக் கைது செய்திருக்கிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத் தோழர்களையும் மகளிரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழ்நாட்டு அரசை வலியுறுத்துகிறேன்.. என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக மகளிர் தினத்தை முன்னிட்டு வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார் விஜய். அதில் திமுகவை விமர்சித்து பேசியிருந்த விஜய், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க மறுத்த திமுக அரசை 2026ல் மாற்றுவோம் எனக் கூறியிருந்தார். மேலும் திமுக அரசு மக்களை ஏமாற்றிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.





