தெலங்கானா என்கவுன்ட்டர்: நாளை மாலைக்குள் மறுபிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு
தெலுங்கானா என்கவுண்டர் சம்பவத்தில் உயிரிழந்த 4 பேரின் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்ய அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொன்ற 4 பேரை தெலுங்கானா காவல்துறையினர் டிசம்பர் 6ஆம் தேதி சுட்டுக்கொன்றனர்.
என்கவுண்டர் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் 4 பேரின் உடல்களை பதப்படுத்தி வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து 4 பேரின் உடல் காந்தி மருத்துவ கல்லூரியில் பதப்படுத்தி வைக்கப்பட்டது.
உடல்கள் அழுகும் நிலையில் உள்ளதாக காந்தி மருத்துவமனை கண்காணிப்பாளர் கூறியதையடுத்து வரும் 23ஆம் தேதி மாலை 5 மணிக்குள் 4 பேரின் உடல்களையும் மறுபிரேத பரிசோதனை செய்ய தெலுங்கானா மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே என்கவுண்டர் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என வழக்கறிஞர் ஜிஎஸ் மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் என்கவுண்டர் குறித்து விசாரிக்க முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் மூன்று பேர் கொண்ட ஆணையத்தை அமைத்து கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி உத்தரவிட்டது.






