ஊரடங்கின்போது சுங்கக் கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு வலுக்கிறது..! மறியல் போராட்டம் நடத்தப் போவதாக வணிகர் சங்க பேரமைப்பு எச்சரிக்கை!!
நாளை முதல் நாடு முழுவதும் டோல்கேட் களில் சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்படும் என்ற அறிவிப்புக்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. ஊரடங்கு காலத்தில் சுங்கக் கட்டணம் வசூலித்தால் மறியல் போராட்டம் நடைபெறும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக கடந்த மார்ச் 24-ந் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்வதும் நிறுத்தப்பட்டது.இந்நிலையில் 2-ம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு மே 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் செய்யப்பட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
ஆனால், நெடுஞ்சாவைத் துறை ஆணையத்தின் இந்த அறிவிப்பு வெளியானது மே நாடு முழுவதும் பெரும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. அகில இந்திய மோட்டார் சம்மேளனம் இதற்கு பெரும் கண்டனம் தெரிவித்தது. ஊரடங்கு காரணமாக லாரிப் போக்குவரத்து முடங்கியுள்ளது அத்தியாவசியத் தேவைகளுக்காக என்பதால் சரக்கு வாகனங்களை நஷ்டத்தில் இயக்குகிறோம். இந்நிலையில் சுங்கக் கட்டணம் வசூல் என்பது ஏற்க முடியாதது என கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதே போன்று காங்கிரஸ் உட்பட முக்கிய எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளும் சுங்கக் கட்டண வசூலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தற்போது கொரானா தடுப்புப் பணிகள் மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டுமே சாலைகளில் செல்கின்றன. பொதுப் போக்குவரத்துக்கு மே 3-ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலித்தால், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயரும் அபாயம் உள்ளது. ஏற்கனவே ஊரடங்கால் மக்கள் துன்பத்துக்கு ஆளாகி உள்ள நிலையில் இது மேலும் நெக்கடிக்கு ஆளாக்கும் என எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இந்நிலையில், சுங்கக் கட்டணம் வசூல் செய்யும் முடிவுக்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஊரடங்கு காலத்தில் சுங்கக் கட்டணம் வசூல் என்ற முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். இல்லாவிட்டால் சுங்கச்சாவடிகள் முன் மறியல் போராட்டம் நடத்தப்படும் என விக்கிரமராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.







