--- --:--:-- --

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்: திமுக சார்பில் இன்று பொதுக்கூட்டங்கள்

3

திமுக-வின் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஓரணியில் தமிழ்நாடு என்ற இயக்கத்தை முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

 

45 நாட்கள் தொடர்ந்து இந்தப் பயணத்தில், வீடு வீடாகச் சென்று மக்களை சந்திக்கும் திமுகவினர், தமிழ்நாட்டுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து பரப்புரை செய்வதுடன், திமுக உறுப்பினர் சேர்க்கை பணியை மேற்கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை திமுகவில் சேர்க்க அக்கட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது.

 

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சியினரின் வீடுகளுக்கும் சென்று பரப்புரை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வீடு இருக்கும் பகுதியில் தான் இருந்தால், அவரது வீட்டிற்கும் சென்று பரப்புரை மேற்கொள்வேன் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

 

தொடர்ந்து ஓரணியில் தமிழ்நாடு பயணத்தில், உறுப்பினர் சேர்க்கை மட்டுமின்றி தேர்தல் பரப்புரையும் உண்டு என கூறினார்.
தமிழ்நாடு முழுவதும் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை திமுக தலைவர்கள் தொடங்கிவைத்தனர். இதனைத் தொடர்ந்து, திமுகவின் அமைப்புரீதியான 76 மாவட்டங்களிலும் திமுக மாவட்டச் செயலாளர்கள் இன்று பொதுக் கூட்டத்தை நடத்துகின்றனர். நாளை முதல் வீடு வீடாகச் சென்று மக்கள் சந்திப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon