மகளிர் உரிமைத் தொகை தொடரும்வரை நான்தான் முதலமைச்சர் – மு.க.ஸ்டாலின்
எங்கே ஸ்டாலின் என தேடாதீர்கள், மக்கள் நலத்திட்டங்களில் எனது கையெழுத்தைப் பாருங்கள்” என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிலளித்தார்.”கூட்டணியே வேண்டாம் என்ற ஆ. ராசா உள்ளிட்ட நிர்வாகிகளின் கருத்துகள் குறித்துப் பரிசீலிப்போம்” என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
திருவாரூர் முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில் அவர் பேசியதாவது:- “நாட்டில் மின்வெட்டுப் பிரச்சனை, டெல்டா மாவட்டத்தில் குறித்த நேரத்தில் விவசாயிகளுக்கு தண்ணீர் திறக்க முடியவில்லை என்பது போன்ற பிரச்சனைகள் உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் நாம் குறித்த நேரத்தில் மேட்டூர் அணையைத் திறந்து வைத்துள்ளோம். இவற்றையெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் எடுத்துச் சொல்லிப் பேசினார். ஆனால் முதலமைச்சராக உள்ளவர் எங்கே உங்கள் அப்பாவைக் காணோம் என்றார்.
அப்பாவை அங்கே தேடாதீர்கள். மக்கள் மனதில் பதிந்திருக்கிறார். சட்டமன்றத்தில் நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் மன்றத்திலே நான் இருக்கிறேன் என்பதை உங்களிடத்தில் கூறிக் கொள்கிறேன். கடந்த 60 வருடங்களாக மக்களோடு மக்களாகத்தான் பணியாற்றி வருகிறேன். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் முதல்வராக இருந்தபோது சென்றிருக்கிறேன். நான் ஆய்வு கூட்டம் நடத்தியதைப்போல யாரும் செய்திருக்க மாட்டார்கள். கோட்டையில்தான் கோப்புகள் உள்ளன. அந்தக் கோப்புகளை எடுத்துப் பாருங்கள். அதில், மகளிருக்கு கலைஞர் உரிமைத் தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்; புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்; தமிழ் புதல்வன் திட்டம் போன்ற திட்டங்களில் எல்லாம் நான் கையெழுத்திட்டுள்ளேன்.
அங்கெல்லாம் நான் இருக்கிறேன். என்னை தேடிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. மக்களோடுதான் இருக்கிறேன். அண்ணா தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்தது ஒன்றே போதும். நான் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த தமிழ்நாடு உள்ளவரை நான்தான் முதலமைச்சர் என்று அண்ணா சொன்னார். அதுபோல, மகளிர் உரிமை திட்டம் இருக்கும் வரை இந்த ஸ்டாலின்தான் முதல்வர் என சொல்லலாம்.
கருணாநிதி கூட்டணி அமைத்தால் வைத்திருப்பார். அவர்களாகத்தான் போனால் போவார்கள் தவிர, வெளியேற்ற மாட்டார். அந்த வழியில்தான் நான் கூட்டணியைப் பாதுகாத்தேன். ஆனால் இன்றைய மக்கள் எல்லாம் கூட்டணியே வேண்டாம் என்ற மனநிலையில் இருக்கிறார்கள். எனவே அதையும் பரிசீலிப்போம் என்று அவர் தெரிவித்தார்.





