234 தொகுதிகளிலும் தொடங்கியது வாக்குப்பதிவு – முதல் நபராக வாக்களித்தார் அஜீத்
தமிழக சட்டப்பேரவையின் 234 தொகுதிகளுக்கும் மற்றும் புதுச்சேரி, கேரள சட்டசபைகளுக்கான தேர்தலில், வாக்குப்பதிவு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை திருவான்மியூர் தொகுதியில் நடிகர் அஜித் – ஷாலினி வாக்களித்துச் சென்றனர்.
தமிழக சட்டமன்றத்தின் 234 தொகுதிகளுக்குமான தேர்தல், இன்று காலை சரியாக 7.00 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு, இரவு 07.00 மணி வரை நடைபெறுகிறது. ஏராளமான வாக்காளர்கள், காலையிலேயே வரிசையில் நின்று காத்திருந்து வாக்களித்து வருவதை பார்க்க முடிகிறது.
சென்னை திருவான்மியூர் தொகுதியில் நடிகர் அஜித் – ஷாலினி ஆகியோர் 7 மணிக்கு ஒருசில நிமிடங்களுக்கு முன்பே வந்து காத்திருந்து, வாக்களித்துச் சென்றனர்.
தேர்தலில் வாக்களிக்க தமிழகம் முழுவதும் 88,936 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பதற்றமான 10,813 வாக்குச்சாவடிகள், மிக பதற்றமான 537 வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். 6.28 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் 3.09 கோடி ஆண்கள், 3.19 கோடி பெண்கள், 7,192 திருநங்கைகள் ஆகியோர் நாளை வாக்களிக்க உள்ளனர். கரோனா பாராமல் தடுக்க, வாக்காளர்கள் முகக்கவசம், கையுறை ஆகியவை அணிந்து வாக்களிக்க வேண்டும்.
இன்றைய தேர்தலில், 234 தொகுதிகளிலும் 3,585 ஆண்கள், 411 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் என மொத்தம் 3,998 பேர் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 77 பேரும், அரவக்குறிச்சியில் 31 பேரும் போட்டியிடுகின்றனர். எடப்பாடியில் எடப்பாடி பழனிசாமியும், போடிநாயக்கனூரில் ஓ.பன்னீர்செல்வமும், கொளத்தூரில் மு.க.ஸ்டாலினும், கோவில்பட்டியில் டிடிவி.தினகரனும், கோவை தெற்கில் கமல்ஹாசனும், திருவொற்றியூரில் சீமானும் போட்டியிடுகின்றனர்.
இதுதவிர, 45 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் சிசிடிவி பொருத்தப்பட்டு இன்டர்நெட் மூலம் நேரடியாகக் கண்காணிக்கப்படுகிறது. தேர்தல் பாதுகாப்பு பணிகளில் துணை ராணுவத்தினர் 23,200 பேர், தமிழக சிறப்பு காவல்படையினர் 8,010 பேர், ஊர்க்காவல் படை, தீயணைப்புத் துறை, சிறை வார்டன்கள் உள்ளிட்ட 34,130 பேர், வெளிமாநில காவல்துறையினர் 6,350 பேர், வெளிமாநில ஊர்க்காவல் படையினர் 12,411 பேர் என மொத்தம் சுமார் 1.58 லட்சம் ஈடுபடுகின்றனர்.
இம்முறை, 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தேர்தலில் கடைசி ஒருமணி நேரத்தில் வாக்களிக்கலாம்.





